முதுமலையில், வன குற்றங்கள் குறித்து நீதிபதிகளுக்கு பயிற்சி முகாம்
முதுமலையில் வன குற்றங்கள் குறித்து நீதிபதிகளுக்கு பயிற்சி முகாம் தொடங்கியது.
மசினகுடி,
தமிழக நீதிமன்றங்களில் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களுக்கு 220 பேர் புதிதாக தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக வன சட்டங்கள் மற்றும் குற்றங்கள் குறித்து தெரிந்து கொள்ளும் வகையில் முதுமலை புலிகள் காப்பக தெப்பக்காட்டில் சிறப்பு பயிற்சி முகாம் நேற்று தொடங்கியது. இதன் தொடக்க விழாவுக்கு முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் கவுசல் தலைமை தாங்கினார். பயிற்சி முகாமை சென்னை ஐகோர்ட்டு நீதிபதி சதீஷ் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். முகாமில் முதற்கட்டமாக 52 நீதிபதிகள் பங்கேற்று உள்ளனர். அவர்களுக்கு வன பாதுகாப்பு, வனவிலங்குகள், வன சட்டங்கள், வன குற்றங்கள் குறித்த கள பயிற்சிகள் வழங்கப்படுகிறது. குறிப்பாக வன சட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்படுகிறது.
இந்த பயிற்சியானது நீதிமன்றங்களில் விசாரணைக்கு வரும் வன குற்றங்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளை எளிதில் புரிந்து கொண்டு கையாளுவதற்காக அளிக்கப்படுகிறது. தொடர்ந்து 3 நாட்கள் நடைபெறும் இந்த முகாம் நிறைவு பெற்றதும் 2-ம் கட்டமாக அடுத்த 52 நீதிபதிகளுக்கு பயிற்சி அளிக்கப்படும். இவ்வாறு தற்போது புதிதாக தேர்வாகி உள்ள 220 பேருக்கும் பயிற்சி வழங்க தமிழக நீதித்துறையும், வனத்துறையும் முடிவு செய்து உள்ளது. இதற்கு முன்பு கடந்த 2015-ம் ஆண்டு நீதிபதி பணியில் சேர்ந்தவர்களுக்கு, இதுபோன்ற பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. விழாவில் நீலகிரி மாவட்ட நீதிபதி வடமலை, புலிகள் காப்பக துணை கள இயக்குனர்கள் செண்பக பிரியா, ஸ்ரீகாந்த் மற்றும் வனச்சரகர்கள் தயாநந்தன், சிவக்குமார், ராஜேந்திரன், விஜய் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story