உள்ளாட்சி தேர்தல் பணிகள் தீவிரம்: மலைக்கிராமத்திற்கு ஓட்டுப்பெட்டிகள் கழுதைகளில் கொண்டு செல்ல நடவடிக்கை


உள்ளாட்சி தேர்தல் பணிகள் தீவிரம்: மலைக்கிராமத்திற்கு ஓட்டுப்பெட்டிகள் கழுதைகளில் கொண்டு செல்ல நடவடிக்கை
x
தினத்தந்தி 15 Dec 2019 10:30 PM GMT (Updated: 15 Dec 2019 9:12 PM GMT)

பென்னாகரம் பகுதியில் உள்ளாட்சி தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதால், மலைக்கிராமங்களுக்கு அரிசி மூட்டைகளை கழுதைகள் மீது ஏற்றிச்சென்று அதிகாரிகள் ஒத்திகையில் ஈடுபட்டனர்.

பாலக்கோடு,

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டத்திற்கு உட்பட்ட வட்டுவனஅள்ளி ஊராட்சியில், கோட்டூர் மலை, ஏரிமலை, அலகட்டு மலை ஆகிய 3 மலைக்கிராமங்கள் உள்ளன. இதில் ஏரிமலையில் 1 வாக்குச்சாவடியும், கோட்டூர் மலையில் 1 வாக்குச்சாவடியும் உள்ளன. ஏரிமலை, அலகட்டு ஆகிய 2 கிராமங்களிலும் 372 வாக்குகளும், கோட்டூர் மலைக்கிராமத்தில் 341 வாக்குகளும் உள்ளன. ஏரிமலையில் உள்ள வாக்குச்சாவடியில் அலகட்டு மலைக்கிராமத்தை சேர்ந்தவர்கள் தேர்தல்களில் வாக்கு அளித்து வருகின்றனர். இந்த 3 மலை கிராமங்களுக்கும் சாலை, போக்குவரத்து வசதி இல்லை.

இங்குள்ள மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை பாலக்கோடு பகுதிக்கு வந்து வாங்கி செல்கின்றனர். மலைப்பகுதி என்பதால் கரடு, முரடான சாலையில் பொருட்களை எடுத்து செல்ல கழுதைகளை இவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். உள்ளாட்சி தேர்தல், சட்டமன்ற தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் நேரங்களில் இந்த ஏரிமலை, கோட்டூர் மலைப்பகுதியில் அமைக்கப்படும் வாக்குச்சாவடிகளுக்கு தேவையான வாக்குப்பெட்டிகள் கழுதைகள் மூலம் எடுத்து செல்லப்பட்டு வருகிறது.

அதிகாரிகள் ஆய்வு

இந்த நிலையில் பென்னாகரம், பாலக்கோடு ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் வருகிற 30–ந்தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து ஏரிமலை, கோட்டூர் மலை ஆகிய மலைக்கிராமங்களில் அமைக்கப்படும் வாக்குச்சாவடிகளுக்கு போதிய அடிப்படை வசதிகள் உள்ளதா?, வாக்குப்பெட்டிகளை கழுதைகள் மூலம் எடுத்து செல்வதில் ஏதேனும் சிரமங்கள் உள்ளதா? என்பதை அறிய, தர்மபுரி உதவி கலெக்டர் (பொறுப்பு) தேன்மொழி தலைமையில், கோட்ட கள ஆய்வாளர் ராஜராஜன், தாசில்தார்கள் வெங்கடேஷ்வரன், சரவணன் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் கோட்டூர் மலை, ஏரிமலைக்கு அரிசிமூட்டைகளை கழுதைகள் மீது ஏற்றிச் சென்று ஒத்திகையில் ஈடுபட்டனர்.

மேலும் வாக்குச்சாவடி மையங்களில், குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் குறித்தும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். கடந்த காலங்களில் வாக்குப்பதிவு எந்திரங்கள் சிறிய அளவில் இருந்ததால் அதை கழுதைகள் மூலம் எடுத்து செல்வதற்கு சிரமம் இல்லாமல் இருந்தது. தற்போது வாக்குப்பெட்டிகள் பயன்படுத்தப்படுவதால் கழுதைகள் மூலம் எடுத்து செல்வதற்கு ஏதேனும் சிரமங்கள் உள்ளதா? என்றும், இந்த கழுதைகள் மூலம் வாக்குப்பதிவுக்கு தேவையான பொருட்களை எடுத்து செல்வதற்கு போதிய ஆட்களை கூடுதலாக வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் கழுதை உரிமையாளர் சின்னராஜிடம் அதிகாரிகள் அறிவுறுத்தினர்.


Next Story