உள்ளாட்சி தேர்தல் பணியில் ஈடுபடும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு முதற்கட்ட பயிற்சி கலெக்டர் ஆய்வு


உள்ளாட்சி தேர்தல் பணியில் ஈடுபடும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு முதற்கட்ட பயிற்சி கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 16 Dec 2019 4:00 AM IST (Updated: 16 Dec 2019 3:05 AM IST)
t-max-icont-min-icon

மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் பணியில் ஈடுபடும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு முதற்கட்ட பயிற்சி வகுப்பு நேற்று நடைபெற்றது. இதனை கலெக்டர் ராமன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சேலம்,

மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகிற 27 மற்றும் 30-ந்தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தல் பணியில் ஈடுபடும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு நேற்று 20 ஊராட்சி ஒன்றியங்களில் முதற்கட்ட பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன.

மகுடஞ்சாவடி, கொங்கணாபுரம் மற்றும் எடப்பாடி ஊராட்சி ஒன்றியங்களில் நேற்று நடைபெற்ற முதற்கட்ட பயிற்சி வகுப்புகளை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான ராமன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது, பயிற்சியில் பங்கேற்ற அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கலெக்டர் ராமன் அறிவுரை வழங்கி பேசியதாவது:-

சேலம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்கனவே கணினியின் மூலம் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

2,741 வாக்குச்சாவடிகள்

சேலம் மாவட்டத்தில் முதற்கட்டமாக 12 ஊராட்சி ஒன்றியங்களில் 2,294 பதவிகளுக்கு வருகிற 27-ந் தேதியும், இரண்டாம் கட்டமாக 8 ஊராட்சி ஒன்றியங்களில் 2,005 பதவிகளுக்கு வருகிற 30-ந் தேதியும் தேர்தல் நடக்கிறது. அன்றைய தினம் காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரையிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்காக 2,741 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

தேர்தல் பணியில் வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களாக 2,953 அலுவலர்களும், வாக்குப்பதிவு அலுவலர்களாக 18,692 அலுவலர்கள் என மொத்தம் 21,645 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அனைவரும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள அனைத்து தேர்தல் நடைமுறைகளையும் முழுமையாக பின்பற்றி இத்தேர்தலை சிறப்பான முறையில் நடத்திட வேண்டும்.

கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் மற்றும் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு மக்கள் நேரடியாக வாக்களித்து தேர்வு செய்ய உள்ளனர்.

கலெக்டர் ஆய்வு

எனவே இந்த 4 இடங்களுக்கும் ஒரே நேரத்தில் வாக்குப்பதிவுகள் நடைபெற உள்ளதால் தங்களுக்கான பொறுப்பும், கடமையும் அதிகம் உள்ளது. இந்த தேர்தல் முழுக்க, முழுக்க வாக்குச்சீட்டு முறையில் நடைபெறுவதால் வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் வாக்குச்சீட்டுகளை முழுமையாக சரிபார்த்து அதில் கையொப்பம் இடவேண்டும்.

மண்டல அலுவலர்கள் வழங்கும் தேர்தல் வாக்கு பதிவிற்கான பொருட்கள் அனைத்தும் இருக்கின்றதா? என்பதை சரிபார்த்து பெற்றுக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதனை தொடர்ந்து எடப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்படவுள்ள வாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட கலெக்டர் ராமன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சரவணன், சங்ககிரி உதவி கலெக்டர் அமிர்தலிங்கம் உட்பட வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி துறை உள்ளிட்ட துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Next Story