உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, காலண்டர் தயாரிப்பு பணி தீவிரம் - கடந்த ஆண்டை விட 15 சதவீதம் விலை உயர்வு
உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு சிவகாசியில் காலண்டர் தயாரிப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது.
சிவகாசி,
தமிழகத்தில் மட்டும் சிவகாசி, சென்னை, மதுரை, கும்பகோணம் ஆகிய பகுதிகளில் காலண்டர் தயாரிப்பாளர்கள் உள்ளனர்.தமிழகத்தில் உள்ள மொத்த காலண்டர் உற்பத்தியாளர்களில் 85 சதவீதம் பேர் சிவகாசியில் உள்ளனர்.இங்கு 100-க்கும் அதிகமான காலண்டர் உற்பத்தியாளர்கள் உள்ளனர்.இதில் 15 சதவீதம் பேர் ஒட்டு மொத்த காலண்டர் தயாரிப்பு பணிகளையும் தாங்களே செய்கிறார்கள். 85 சதவீத உற்பத்தியாளர்கள் காலண்டர் தயாரிப்பு பணிகளை பிரித்து கொடுத்து செய்து வருகிறார்கள்.
காலண்டர் உற்பத்தியில் ஸ்கோரிங், லேமினேஷன், கட்டிங், பைண்டிங், ஸ்கிரீன் பிரிண்டிங், பாலீஸ்ஒர்க்ஸ் ஆகிய பணிகள் முக்கியமானவை. இவைகள்அனைத்தும் குடிசை தொழிலாக செய்ய முடியும். இந்தபணிகளை பலரும் தங்கள் இருப்பிடங்களிலேயே செய்து வருகிறார்கள். இதனால் இந்த தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 1 லட்சம் தொழிலாளர்கள் பயன்பெறுகின்றனர். குறிப்பாக காலண்டர் தயாரிப்பில் பெண்கள்அதிக அளவில் ஈடுபட்டு வருகிறார்கள். பாதுகாப்பான தொழில் என்பதாலும், குறைந்த அளவு கல்வி அறிவு அவசியம் இல்லை என்றநிலை இருப்பதால் காலண்டர் தயாரிப்பில் பெண்கள்அதிகம் ஈடுபடுத்தப்படுவதாக கூறப்படுகிறது.
கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அதிகஅளவில் காலண்டர் ஆர்டர்கள் வந்த நிலையில் போதிய பணியாளர்கள் இல்லாததால் காலண்டர் தயாரிப்பு பணிகள் வெகுவாக பாதித்துள்ளது. மேலும் மூலப்பொருட்களின் விலை உயர்வு, தொழிலாளர்களின் சம்பள உயர்வு ஆகிய காரணங்களால் இந்த ஆண்டு காலண்டர் விலை கடந்த ஆண்டை காட்டிலும் 15 சதவீதம் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து தமிழ்நாடு காலண்டர் உற்பத்தியாளர்கள்சங்க செயலாளர் கற்பகா ஜெய்சங்கர் கூறியதாவது:-
2020-க்கான காலண்டர் தயாரிக்கும் பணியை நாங்கள் கடந்த ஆகஸ்டு மாதம் தொடங்கினாலும் எங்களுக்கு ஆகஸ்டு, செப்டம்பர், அக்டோபர், நவம்பர் ஆகிய மாதங்களில் 50 சதவீத ஆர்டர்களே வந்தது. நாங்களும் சம்பந்தப்பட்டவர்களுக்கு கடந்த ஆண்டை காட்டிலும் 5 சதவீத விலை உயர்வில் போதிய காலண்டர்களை தயாரித்து வழங்கினோம். ஆனால் நவம்பர் மாதம் இறுதியிலும், டிசம்பர் மாதம் தொடக்கத்திலும் ஒரே காலகட்டத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் காலண்டர் தேவைக்கு ஆர்டர் கொடுத்துள்ளனர்.
இதனால் தற்போது குறுகியகாலகட்டத்தில் அதிகஅளவில் காலண்டர்கள் தயாரிக்க வேண்டிய கட்டாயத்தில் நாங்கள் இருக்கிறோம்.தொழிலாளர்களுக்கு கூடுதல் சம்பளம் கொடுத்து அந்தபணிகளை முடிக்க வேண்டிய கட்டாயம் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் கடந்த மாதம் சிவகாசி பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வந்ததால் காலண்டர் உற்பத்தியில் தொய்வு ஏற்பட்டது.
அதே போல் வழக்கமாக வரும் தொழிலாளர்கள் தற்போது காலண்டர் தயாரிப்பு பணிக்கு வரவில்லை. இதனாலும் உற்பத்தி கடுமையாக பாதித்துள்ளது.கடந்த ஆண்டு மூலப்பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டது. தற்போது வாடிக்கையாளர்கள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் காலண்டர் ஆர்டர் கொடுத்ததால் உற்பத்தியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
இதை சரி செய்ய தேவையான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.காலண்டர் மோகம் நாளுக்கு நாள்அதிகரித்து வரும் நிலையில் தற்போது தேர்தல் நேரம் என்பதால் அரசியல் பிரமுகர்கள் பலர் காலண்டர் தயாரித்து வழங்க முடிவு செய்து ஆர்டர் கொடுத்து வருகிறார்கள். தற்போது வரும் ஆர்டர்படி பார்த்தால் ஜனவரி மாதம் இறுதி வரை காலண்டர் உற்பத்தியில் நாங்கள் ஈடுபட வேண்டி இருக்கும். இதுபோன்ற ஒரு நெருக்கடியை தவிர்க்க ஆகஸ்டு, செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் ஆர்டர்களை வாடிக்கையாளர்கள் கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறுஅவர் கூறினார்.
Related Tags :
Next Story