சென்னை மதுரவாயலில், நண்பரை கொலைசெய்து விட்டு பஸ்சில் தப்பி வந்த வாலிபர் - பண்ருட்டியில் போலீசார் மடக்கி பிடித்தனர்
சென்னை மதுரவாயலில் தலையில் கல்லைப்போட்டு நண்பரை கொலை செய்துவிட்டு பஸ்சில் தப்பி வந்த வாலிபரை பண்ருட்டியில் போலீசார் மடக்கி பிடித்தனர்.
பண்ருட்டி,
கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைக்குளம் பகுதியை சேர்ந்தவர் சைமன்ராஜ் மகன் சாம்சன்(வயது 24). கட்டிடங்களில் ஓடுகள் ஒட்டும் தொழிலாளியான இவர் சென்னை மதுரவாயல் அய்யப்பன் நகர் முத்துமாரியம்மன் கோவில் தெருவில் உள்ள ஒரு வீட்டில் தங்கி இருந்து வேலை செய்து வந்தார். உடன் இவரது நண்பர்கள் முரளி(24), அரவிந்த், சுப்பிரமணி ஆகிய 3 பேரும் தங்கி இருந்தனர். இந்த நிலையில் கடந்த 12-ந்தேதி முரளியின் பணப்பை திடீரென காணாமல் போனது. அதில் ரூ.1,500 பணம் மற்றும் ஏ.டி.எம். கார்டு இருந்தது. பணப்பையை எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
பின்னர் நேற்று முன்தினம் இரவு சாம்சன் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேரும் மது குடித்தனர். அப்போது முரளி சாம்சனிடம் நீதான் எனது பணப்பையை எடுத்து இருக்க வேண்டும் என கூறி அவரிடம் வாக்குவாதம் செய்தார். பின்னர் அவர்கள் அயர்ந்து உறங்கினர். முரளியின் மீது ஆத்திரத்தில் இருந்த சாம்சன் அதிகாலையில் எழுந்து ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த முரளியின் தலையில் கலைப்போட்டு கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பினார்.
இதுகுறித்து மதுரவாயல் போலீசார் வழக்கு பதிவுசெய்து முரளியின் நண்பர்கள் அரவிந்த், சுப்பிரமணியன் ஆகிய 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் முரளியை கொலை செய்த சாம்சன் கும்பகோணத்துக்கு பஸ்சில் தப்பி செல்வது தெரியவந்தது. உடனே மதுரவாயல் போலீசார் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ்வுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து பஸ்சில் தப்பி வரும் சாம்சனை பிடிக்க பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு லோகநாதனுக்கு போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் உத்தரவிட்டார்.
அதன்படி நேற்று துணை போலீஸ் சூப்பிரண்டு லோகநாதன் தலைமையில் போலீசார் பண்ருட்டி 4 முனை சந்திப்பில் நின்று கொண்டிருந்தனர். அப்போது கும்பகோணத்துக்கு செல்லும் அரசு பஸ்சில் இருந்து இறங்கிய வாலிபர் ஒருவரை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் மதுரவாயலில் நண்பரின் தலையில் கல்லை தூக்கிப்போட்டு கொலைசெய்து விட்டு பஸ்சில் தப்பி வந்த சாம்சன் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை பண்ருட்டி போலீசார் கைது செய்து மதுரவாயல் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
Related Tags :
Next Story