குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்- ஜமா அத்துல் உலமா சபையினர் 320 பேர் கைது
குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஜமாஅத்துல் உலமா சபையினர் 320 பேர் கைது செய்யப்பட்டனர்.
விழுப்புரம்,
மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள இந்திய குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கண்டித்து விழுப்புரம் வட்டார ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்தனர். இதற்கு போலீஸ் அனுமதி மறுக்கப்பட்டது. இருப்பினும் தடையை மீறி நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்திற்கு உலமா சபை தலைவர் முஹம்மது அஷ்ரப்அலி தலைமை தாங்கினார். பொன்முடி எம்.எல்.ஏ., இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கை சேர்ந்த நவாஸ்கனி எம்.பி., மனிதநேய மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் அப்துல்சமது, மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமீமுன்அன்சாரி எம்.எல்.ஏ., எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில பொதுச்செயலாளர் உமர்பாரூக், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாவட்ட தலைவர் குலாம்மொய்தீன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் பாபுகோவிந்தராஜ், தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட செயலாளர் குமரன், தி.க. மண்டல தலைவர் தாஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளர் சிந்தனைச்செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி முன்னாள் எம்.எல்.ஏ. ராமமூர்த்தி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சரவணன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
இதில் த.மு.மு.க. மாவட்ட தலைவர்கள் முஸ்தாக்தீன், பஜிலுதீன், மாவட்ட பொருளாளர் அப்பாஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் அமீர்அப்பாஸ், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட தலைவர் சாதிக்பாஷா, மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட தலைவர் அக்பர்அலி, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நகரமன்ற உறுப்பினர் முபாரக்அலி உள்பட பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையாற்றியவர்கள் பேசிவிட்டு சென்றனர்.
அதன் பின்னர் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 320 பேரை போலீசார் கைது செய்து விழுப்புரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story