தேவாலாவில் வளர்ச்சி பணிகளை நிறுத்தக்கூடாது, கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் மனு
தேவாலாவில் வளர்ச்சி பணிகளை நிறுத்தக்கூடாது என்று கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் மனு அளித்தனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தேவாலாவை சேர்ந்த பொதுமக்கள், பொது நல அமைப்புகள், அரசியல் கட்சியினர் என 100-க்கும் மேற்பட்டோர் நேற்று ஊட்டி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-
தேவாலா-அத்திகுன்னா சாலையில் தனியாருக்கு சொந்தமான தார் கலவை தயார் செய்யும் நிறுவனம், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் மூலம் எவ்வித பிரச்சினையும் இல்லை என்று பல்வேறு துறையினர் சான்று அளித்து உள்ளனர். அங்கு தயாராகும் தார் கொண்டு சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது. அதன் மூலம் தமிழக அரசின் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றது. ஆனால் ஒப்பந்ததாரரிடம் உள்ள பிரச்சினையை மனதில் கொண்டு தேவாலாவில் நடைபெறும் வளர்ச்சி பணிகளை தடுக்கும் நோக்கத்தோடு சிலர் செயல்படுவது தெரியவந்தது. கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதையடுத்து தமிழக அரசால் டெண்டர் விடப்பட்டு சாலை சீரமைப்பு பணிகள் நடந்து வரும் நிலையில், சிலர் எவ்வித பணிகளும் நடக்கக்கூடாது என்று தெரிவித்து ஒப்பந்ததாரரை மிரட்டி வருகின்றனர்.
அவர்கள் போக்கர் காலனி பொதுமக்கள் என்று கூறி போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். தார் கலவை செய்யும் நிறுவனம் அருகில் வசித்து வரும் மக்களுக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை. தேவாலா பஜார் குண்டும், குழியுமாக வாகனங்கள் செல்ல முடியாமல் இருக்கிறது. இதனை சீரமைக்கும் பணி ஓரிரு நாட்களில் நடைபெற போகிறது. இதை தெரிந்துகொண்ட சிலர் பணியை நிறுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படுகின்றனர். எனவே அவர்களின் கருத்தை கேட்டு வளர்ச்சி பணிகளை நிறுத்தாமல் இருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. இந்த மனுவின் நகல்கள் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலகத்தில் கொடுக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story