‘நாங்களும் சாவர்க்கர் தான்' என கோஷம்; சட்டசபைக்கு காவி தொப்பி அணிந்து வந்த பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள்
மராட்டிய சட்டசபை குளிர்கால கூட்டத்தொடரில் காவி தொப்பி அணிந்து கலந்து கொண்ட பாரதீய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் நாங்களும் சாவர்க்கர் தான் என கோஷம் எழுப்பினர். அவர்கள் அமளியில் ஈடுபட்டதால் சபை ஒத்தி வைக்கப்பட்டது.
நாக்பூர்,
டெல்லியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தனது ‘ரேப் இன் இந்தியா' பற்றிய பேச்சுக்கு ‘மன்னிப்பு கேட்க நான் ஒன்றும் ராகுல் சாவர்க்கர் அல்ல என சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். சுதந்திர போராட்டத்தின் போது ஆங்கிலேயர்களிடம் மராட்டியத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரரும், இந்துத்வா கொள்கைவாதியுமான சாவர்க்கர் மன்னிப்பு கேட்டதாக கூறப்படுவதை முன்வைத்து ராகுல் காந்தி இப்படி கூறியிருந்தார்.
ராகுல்காந்தியின் இந்த கருத்தை மராட்டியத்தில் அதன் கூட்டணி கட்சியான சிவசேனா கண்டித்தது. பாரதீய ஜனதா கடும் கண்டனம் தெரிவித்தது. ராகுல்காந்தி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் வலியுறுத்தினார்.
நாக்பூரில் நேற்று தொடங்கிய மராட்டிய சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடரில் ராகுல்காந்தியின் வீரசாவர்க்கர் பற்றிய சர்ச்சை பேச்சு பிரச்சினையை பாரதீய ஜனதா கையில் எடுத்தது.
சட்டசபை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பாரதீய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் ‘நாங்களும் சாவர்க்கர் தான்' என்ற வாசகம் எழுதப்பட்ட காவி தொப்பியை அணிந்து சபைக்கு வந்தனர். அப்போது ‘நாங்களும் சாவர்க்கர் தான்' என கோஷங்கள் எழுப்பினார்கள். சபை கூடியதும் எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார். வீர சாவர்க்கரின் பணி மற்றும் பக்தி குறித்து புகழ்ந்து பேசினார்.
அப்போது, சபாநாயகர் நானாபட்டோலே தேவேந்திர பட்னாவிசின் பேச்சை சபை குறிப்பில் சேர்க்க வேண்டாம் என அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.
இதனால் ஆவேசம் அடைந்த பாரதீய ஜனதா உறுப்பினர்கள் சபையில் கடும் அமளியில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் சபாநாயகர் ஒருதலைப்பட்சமாக செயல்பட கூடாது என பாரதீய ஜனதா உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர். பாரதீய ஜனதாவினரின் அமளியை தொடர்ந்து சபாநாயகர் நானாபட்டோலே சபையை 10 நிமிடத்துக்கு ஒத்தி வைத்தார்.
Related Tags :
Next Story