நீர்ப்பாசன ஊழலை சி.பி.ஐ. விசாரிக்க கோரி வழக்கு; அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு


நீர்ப்பாசன ஊழலை சி.பி.ஐ. விசாரிக்க கோரி வழக்கு; அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 17 Dec 2019 4:45 AM IST (Updated: 17 Dec 2019 5:55 AM IST)
t-max-icont-min-icon

நீர்ப்பாசன ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட கோரும் வழக்கில் பதில் அளிக்குமாறு மராட்டிய அரசுக்கு மும்பை ஐகோர்ட்டின் நாக்பூர் கிளை உத்தரவிட்டு உள்ளது.

நாக்பூர், 

மராட்டியத்தில் கடந்த 1999 முதல் 2009 வரையிலான காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் போது, 45 நீர்ப்பாசன திட்டங்களுக்காக வழங்கப்பட்ட 2,654 டெண்டர்களில் ரூ.70 ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் நடந்து உள்ளதாக மும்பை ஐகோர்ட்டின் நாக்பூர் கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

அப்போதைய நீர்பாசனத்துறை மந்திரியாகவும், விதர்பா நீர்ப்பாசன மேம்பாட்டு கழகத்தின் தலைவராகவும் இருந்த தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித்பவார் மீதும் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது.

இ்ந்த ஊழல் தொடர்பான வழக்கை ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாா் விசாரித்து வருகின்றனர். இந்த முறைகேடு வழக்கில் அஜித்பவார் குற்றமற்றவர் என கடந்த மாதம் லஞ்ச ஒழிப்புத்துறை ஐகோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது.

இந்த நிலையில், நீர்ப்பாசன ஊழல் வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட வேண்டும் என ஜன்மஞ்ச் என்ற தொண்டு நிறுவனமும், அதுல் ஜக்தாப் என்பவரும் கடந்த வாரம் மும்பை ஐகோர்ட்டின் நாக்பூர் கிளையில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு மீதான விசாரணை நேற்று நீதிபதிகள் இசட்.ஏ.ஹக், எம்.ஜி.கிராட்கர் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றுவது தொடர்பாக அடுத்த மாதம் (ஜனவரி) 15-ந் தேதிக்குள் பதில் அளிக்கும் வகையில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யும்படி மராட்டிய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Next Story