பள்ளிக்கு செல்லும் வாசலை மூடியதை கண்டித்து: அணுசக்தி நிறுவன ஊழியர் குடியிருப்பு வாசலை மூடி - பொதுமக்கள் போராட்டம்


பள்ளிக்கு செல்லும் வாசலை மூடியதை கண்டித்து: அணுசக்தி நிறுவன ஊழியர் குடியிருப்பு வாசலை மூடி - பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 17 Dec 2019 4:15 AM IST (Updated: 17 Dec 2019 12:24 AM IST)
t-max-icont-min-icon

கல்பாக்கத்தில் பள்ளிக்கு குழந்தைகள் செல்லும் வாசலை மூடியதை கண்டித்து, அணுசக்தி நிறுவன ஊழியர் குடியிருப்பு பிரதான வாசலை பொதுமக்கள் மூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கல்பாக்கம்,

கல்பாக்கம் அடுத்த சதுரங்கப்பட்டினம் கடல் கரையையொட்டி மத்திய அரசு துறைக்குட்பட்ட அணுசக்தி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி செய்கின்றனர். இவர்கள் குடும்பத்துடன் கல்பாக்கம் மற்றும் அணுபுரம் கிராமங்களில் உள்ள ஊழியர் குடியிருப்பில் வசித்து வருகின்றனர். கல்பாக்கம் குடியிருப்பு புதுப்பட்டினம் மற்றும் சதுரங்கப்பட்டினம் கிராமங்களுக்கு நடுவே அமைந்துள்ளது. இரண்டு கிராமங்களின் எல்லையிலும் அணுசக்தி துறை குடியிருப்பு பாதுகாப்புக்காக பிரதான வாசல்கள் உள்ளன.

மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் இந்த வாசல்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சதுரங்கப்பட்டினம் வாசல் அருகே குடியிருப்பின் உள்புறம் மத்திய அரசின் அணுசக்தி பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் அணுசக்தி துறை ஊழியர்களின் குழந்தைகள் மற்றும் சுற்றுப்புற கிராம பொதுமக்களின் குழந்தைகள் பயின்று வருகின்றனர்.

இந்த பள்ளியின் பின்புறம் சிறிய வாசல் உள்ளது. அதன் வழியாக மாணவர்கள் பள்ளிக்கு சென்று வந்தனர்.

இந்நிலையில் நேற்று பின்புற வாயில் கதவு திடீரென பூட்டப்பட்டிருந்தது. இதனால் மாணவர்கள் வகுப்புக்கு செல்ல முடியாத நிலையில் அதிர்ச்சியடைந்தனர். இதையறிந்த மாணவர்களின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் சமபந்தப்பட்ட பள்ளியில் கேட்டபோது, பாதுகாப்பு கருதி சிறிய நுழைவாயில் பூட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் ஆவேசமடைந்த பொதுமக்கள் ஏராளமானோர் சதுரங்கப்பட்டினம் ஊழியர் குடியிருப்புக்கிடையே உள்ள பிரதான வாசலை இழுத்து மூடி தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதே போல கல்பாக்கம் போலீஸ் நிலையம் அருகே உள்ள பிரதான வாசலையும் புதுப்பட்டினம் பகுதி மக்கள் மூடிவிட்டு கண்டன கோசங்கள் எழுப்பினர்.

இதனால் இரு பகுதிகளிலும் அரசு பஸ்கள் உட்பட வாகனங்கள் தொடர்ந்து செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் காத்து நின்றன. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கல்பாக்கம் மற்றும் சதுரங்கப்பட்டினம் போலீஸ் அதிகாரிகள் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக இந்த சிறிய வாசல் வழியாகத் தான் குழந்தைகள் பள்ளிக்கு சென்று வருகின்றனர். இப்போது இந்த வாசலை மூடியதால் குழந்தைகள் அரை கி.மீ. தொலைவு நடந்து செல்வது மிகவும் சிரமமாக உள்ளது. எனவே உடனடியாக மூடிய வாசலை திறக்க வேண்டும் என்று கூறினர்.

இதையடுத்து அவர்களது கோரிக்கையை ஏற்று மூடப்பட்ட வாசல் திறக்கப்பட்டது.

Next Story