தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் - நெல் குவிண்டாலுக்கு ரூ.2,500 வழங்க கோரிக்கை


தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் - நெல் குவிண்டாலுக்கு ரூ.2,500 வழங்க கோரிக்கை
x
தினத்தந்தி 17 Dec 2019 3:45 AM IST (Updated: 17 Dec 2019 1:16 AM IST)
t-max-icont-min-icon

நெல் குவிண்டாலுக்கு ரூ.2,500 வழங்க கோரி தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தஞ்சாவூர்,

தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் நெல் குவிண்டாலுக்கு ரூ.2,500 வழங்க கோரி தஞ்சை கலெக்டர் அலுவலக வளாகத்தில் நெல்லை கொட்டி போராட்டம் நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். விவசாயிகள் சங்க மாநில தலைவர் விசுவநாதன் தலைமையில் விவசாயிகள் சிலர் நேற்றுகாலை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் நெல் மூட்டையில் இருந்து நெல்லை அள்ளுவதற்கு முயற்சி செய்தபோது, போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

தேர்தல் நடத்த விதிகள் நடைமுறையில் உள்ளதால் நெல்லை கொட்டி ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கிடையாது என போலீசார் தெரிவித்தனர். எங்களது கோரிக்கைகளை வெளிப்படுத்துவதற்கு கூட அனுமதி கிடையாதா? என விவசாயிகள் ஆவேசப்பட்டனர். இதைத்தொடர்ந்து நெல்லை கொட்டாமல் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு போலீசார் அனுமதி அளித்தனர். பின்னர் பல்வேறு கோ‌‌ஷங்களை எழுப்பி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாநில தலைவர் விசுவநாதன் நிருபர்களிடம் கூறும்போது, ஒவ்வொரு ஆண்டும் யானை பசிக்கு சோளப்பொறி என்பதைபோல் நெல்லுக்கான விலையை மத்தியஅரசு அறிவித்து வருகிறது. குறைந்தபட்ச விலையாக நெல் குவிண்டாலுக்கு ரூ.2,340 வழங்க வேண்டும் என எம்.எஸ்.சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரை செய்து 5 ஆண்டுகளை கடந்துவிட்டது. ஆனால் இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஒரு ஏக்கருக்கு ரூ.55 ஆயிரத்து 550 வரை செலவு ஆகிறது. ஆனால் அறுவடை செய்து நெல்லை விற்றால் ரூ.37 ஆயிரத்து 700-க்கு தான் விற்க முடிகிறது. ஒரு ஏக்கருக்கு ரூ.17 ஆயிரத்து 800 ந‌‌ஷ்டம் ஏற்படுகிறது.

இந்த ந‌‌ஷ்டத்தை ஈடு செய்ய நெல் குவிண்டாலுக்கு ரூ.3,000 வரை எதிர்பார்க்கிறோம். இருப்பினும் ரூ.2,500 வழங்கினால் கூட விவசாயிகளுக்கு கைப்பிடித்தம் இருக்காது. மாநில அரசு ஊக்கத்தொகை வழங்குவதை மத்தியஅரசு தடுக்கக்கூடாது. சத்தீ‌‌ஷ்கரில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டதைபோல் நெல் குவிண்டாலுக்கு ரூ.2,500 வழங்க வேண்டும் என்றார். பின்னர் விவசாயிகள், கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பெட்டியில் மனுக்களை போட்டுவிட்டு சென்றனர்.

Next Story