வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள்: திருவாரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கூட்டம் அலைமோதியது


வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள்: திருவாரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கூட்டம் அலைமோதியது
x
தினத்தந்தி 17 Dec 2019 4:00 AM IST (Updated: 17 Dec 2019 1:16 AM IST)
t-max-icont-min-icon

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்ய நேற்று கடைசி நாள் என்பதால் திருவாரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கூட்டம் அலைமோதியது. இதனால் அரசியல் கட்சியினருக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

திருவாரூர், 

திருவாரூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகிற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 9-ந் தேதி தொடங்கியது. நேற்று கடைசி நாள் என்பதால் வேட்பு மனு தாக்கல் விறு, விறுப்பாக நடைபெற்றது. காலை முதல் அரசியல் கட்சியினர், சுயேச்சை வேட்பாளர்கள் குவிந்ததால் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களில் கூட்டம் அலை மோதியது.

திருவாரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கடைவீதி செல்லும் பிரதான சாலையில் அமைந்துள்ளது. இதனால் போலீசார் பாதுகாப்பு கருதி பழைய பஸ்நிலையத்தில் இருந்து கடைவீதி செல்லும் சாலையை முற்றிலும் தடுப்பு அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். இதனால் கடைவீதி செல்பவர்கள் பெரிதும் சிரமத்திற்குள்ளாயினர்.

ஊராட்சி ஒன்றிய அலுவலக வாசலில் போலீசார் தடுப்பு அமைத்து வேட்பாளர்களை தேர்தல் விதிமுறைப்படி உள்ளே அனுமதித்தனர். இதில் தி.மு.க.வினர் வேட்பு மனு செய்ய வந்தபோது வேட்பாளர்கள் உள்ளே செல்ல அனுமதிப்பதில் பிரச்சினை எழுந்தது. இதனால் அரசியல் கட்சியினருக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து சுமூக நிலை ஏற்பட்டு வேட்பு மனு தாக்கல் அமைதியான முறையில் நடைபெற்றது.

இதனையடுத்து இன்று (செவ்வாய்க்கிழமை) வேட்பு மனுக்கள் பரிசீலனை நடக்கிறது., வேட்பு மனுக்கள் திரும்ப பெற வருகிற 19-ந் தேதி(வியாழக்கிழமை) என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் முடிவில் இறுதி பட்டியல் வெளியிடப்படுகிறது. இதனை தொடர்ந்து முதற்கட்டமாக 27-ந் தேதி அன்று கோட்டூர், மன்னார்குடி, முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, திருவாரூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கும், இரண்டாம் கட்டமாக 30-ந் தேதி குடவாசல், கொரடாச்சேரி, நன்னிலம், நீடாமங்கலம், வலங்கைமான் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களிலும் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது.

Next Story