‘ஆபரேஷன் தாமரை’ ஆடியோ விவகாரம்; முதல்-மந்திரி எடியூரப்பா மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
ஆபரேஷன் தாமரை ஆடியோ விவகாரத்தில் முதல்-மந்திரி எடியூரப்பா மீதான வழக்கு விசாரணையை ஒத்திவைத்து கலபுரகியில் உள்ள ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு,
கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சியில் குமாரசாமி முதல்-மந்திரியாக இருந்தார். ‘ஆபரேஷன் தாமரை‘ மூலம் கூட்டணி அரசை கவிழ்ப்பது தொடர்பான விஷயத்தில் ஜனதா தளம்(எஸ்) கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. நாகனகவுடா கந்தகோரின் மகன் சரணகவுடா கந்தகோருடன் எடியூரப்பா ராய்ச்சூர் தேவதுர்காவில் பேரம் பேசியதாக ஆடியோ உரையாடல் பதிவு ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் குறித்து தேவதுர்கா போலீசார், எடியூரப்பா, பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் சிவன்னகவுடா நாயக், பிரிதம்கவுடா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கு தடை விதிக்க கோரி முதல்-மந்திரி எடியூரப்பா கர்நாடக ஐகோர்ட்டு கலபுரகி கிளையில் வழக்கு தொடர்ந்தார். இதுகுறித்த வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.
விசாரணைக்கு விதிக்கப்பட்டுள்ள இடைக்கால தடையை நீக்க கோரி சரணகவுடா கந்தகோர் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த மனு நேற்று ஐகோர்ட்டு கலபுரகி கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கின் அடுத்த விசாரணையை வருகிற ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.
Related Tags :
Next Story