கடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு, வேட்புமனு தாக்கல் செய்ய திரண்ட பொதுமக்கள் - போக்குவரத்து பாதிப்பு


கடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு, வேட்புமனு தாக்கல் செய்ய திரண்ட பொதுமக்கள் - போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 16 Dec 2019 9:45 PM GMT (Updated: 16 Dec 2019 7:50 PM GMT)

கடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு வேட்புமனு தாக்கல் செய்ய பொதுமக்கள் திரண்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

கடலூர், 

தமிழகத்தில் ஊரக பகுதிகளில் உள்ள சிற்றூராட்சி தலைவர், வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு வருகிற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 9-ந் தேதி தொடங்கியது.

முதல்நாளில் குறைந்த அளவிலேயே வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர். பின்னர் 2-வது நாளில் இருந்து வேட்பு மனுதாக்கல் செய்வோரின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்தது. இதனால் உள்ளாட்சி தேர்தல் களம் சூடுபிடித்தது. அந்த வகையில் கடலூர் மாவட்டத்திலும் சிற்றூராட்சி தலைவர், வார்டு உறுப்பினர், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் ஆகிய பதவிகளுக்கு போட்டியிட அந்தந்த பஞ்சாயத்து அலுவலகம் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

அதன்படி 6-வது நாளாக கடந்த 14-ந் தேதி நடைபெற்ற வேட்புமனு தாக்கலின் போது மாவட்டம் முழுவதும் 12 ஆயிரத்து 236 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். வேட்பு மனுதாக்கல் செய்ய நேற்று கடைசிநாள் என்பதால் அதிகாலையில் இருந்தே ஊராட்சி அலுவலகம் மற்றும் ஒன்றிய அலுவலகம் முன்பு பொதுமக்கள் திரண்டனர்.

அந்தவகையில் கடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்குட்பட்ட சிற்றூராட்சி தலைவர், ஒன்றிய வார்டு கவுன்சிலர் மற்றும் மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக பொதுமக்கள் தங்கள் வேட்பாளர்களுடன் வேன், மினிலாரி, டிராக்டர் போன்ற வாகனங்களில் கடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு திரண்டனர்.

ஆனால் வேட்புமனு தாக்கல் செய்ய வேட்பாளருடன் முன்மொழியும் நபர்களை மட்டுமே உள்ளே செல்ல போலீசார் அனுமதித்தனர். இதனால் வேட்பாளருடன் வந்த பொதுமக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்புள்ள கடலூர்-நெல்லிக்குப்பம் சாலையில் நின்று கொண்டிருந்தனர். மேலும் இருசக்கர வாகனங்களில் வந்தவர்களும் தங்கள் வாகனங்களை சாலையோரம் நிறுத்தி வைத்திருந்தனர்.

நேரம் செல்ல செல்ல பொதுமக்கள் வருகை அதிகரித்ததால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியின் இரு மார்க்கங்களிலும் வாகனங்கள் மெதுவாக சென்றன. சாலையில் நிற்பதற்குகூட இடவசதி இல்லாததால் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் சாலையோரத்தில் உள்ள நடைபாதையில் அமர்ந்து இருந்தனர்.

முன்னதாக அசம்பாவித சம்பவங்களை தடுக்க துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தி தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் உதயகுமார், பால்சுதர் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story