மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 கோடி வழங்க வேண்டும்
மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த 17 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி வழங்க வேண்டும் என்று கோவையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் திருமாவளவன் பேசினார்.
கோவை,
மேட்டுப்பாளையம் நடூரில் தடுப்பு சுவர் வீடுகள் மீது விழுந்து 17 பேர் பலியானார்கள். தடுப்பு சுவரை முன்கூட்டியே அகற்றாததால் இந்த சம்பவம் நடைபெற்றது என்றும், இதனை கண்டித்தும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு திருமாவளவன் எம்.பி. தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய, மாநில அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார்கள்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு திருமாவளவன் பேசும்போது கூறியதாவது:-
தீண்டாமை சுவர் இடிந்து 17 பேர் இறந்துள்ளனர். தடுப்பு சுவர் உரிமையாளர் சிவசுப்பிரமணியன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் இந்த சம்பவம் தொடர்பாக எங்களது கட்சியை சேர்ந்த ரவிக்குமார் எம்.பி. பேசினார். அதன்பின்னர்தான் தாழ்த்தப்பட்டோர் ஆணைய அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
நாட்டில் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிரான போராட்டங்கள் வலுத்து வருகிறது. ஆர்.எஸ்.எஸ்.சின் கொள்கைகளை மத்திய பாரதீய ஜனதா அரசு நிறைவேற்றி வருகிறது. இதனை கண்டிக்கிறோம். சமூகநீதிக்கான எங்களது போராட்டம் தொடர்ந்து நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆர்ப்பாட்டத்துக்கு பின் திருமாவளவன் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழ்புலிகள் கட்சி தலைவர் நாகை திருவள்ளுவன் மீது பழிவாங்கும் எண்ணத்தில் போடப்பட்டுள்ள பொய்வழக்குகளை திரும்பப்பெற வேண்டும். தமிழகம் முழுவதும் தீண்டாமை சுவர், தீண்டாமை சாலை, தீண்டாமை நீர் நிலைகள், உணவகங்கள், கோவில், சுடுகாடுகள் போன்ற வடிவங்களை தடுத்து நிறுத்த வேண்டும்.
மேட்டுப்பாளையம் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். குடியுரிமை சட்டம் கண்டிக்கத்தக்கது. இதற்காக போராடும் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது கண்டிக்கத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் மாநில முதன்மை செயலாளர்கள் உஞ்சை அரசன், பாவரசு, தகடூர் தமிழ் செல்வன், துணை பொது செயலாளர்கள் வன்னியரசு, பாலாஜி, மண்டல செயலாளர் சுசிகலையரசன், நகர செயலாளர் இலக்கியன், பிரபு, கோவை குமணன், கோவை சம்பத், வக்கீல் துரை.இளங்ேகா, பாலசிங்கம் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
ஆறுதல் கூறினார்
முன்னதாக மேட்டுப்பாளையம் சென்ற திருமாவளவன் பலியான 17 பேர் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். சுற்றுப்புற சுவர் இடிந்து விழுந்த இடத்தையும் பார்வையிட்டார்.
Related Tags :
Next Story