குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு: கோவையில் மாணவர்கள் போராட்டம்; 36 பேர் கைது
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள். மாணவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில், 36 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவை,
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் கலவரம் பற்றி எரிகிறது. அசாமில் போலீஸ் துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலியானார்கள். இதனை தொடர்ந்து டெல்லியிலும் போராட்டம் வெடித்தது. இதில் பல்கலைக்கழக மாணவர்கள் ஏராளமானோர் கைது செய்யப்பட் டனர்.
இந்தநிலையில் தமிழகத்திலும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். கோவையில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக ரெயில் மறியல் போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனையடுத்து நேற்று போலீசார் ரெயில் நிலையம் முன்பு தடுப்பு வேலிகளை அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஆனால் அங்கு திரண்ட மாணவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பியவாறு ஊர்வலமாக ரெயில் நிலையத்தை நோக்கி வந்தனர். ரெயில் நிலையம் முன்பு வந்ததும் அவர்களை போலீசார் கலைந்து செல்லும்படி கூறினர். ஆனால் இதனை ஏற்காத மாணவர்கள் ரெயில் நிலையத்துக்குள் நுழைந்து ரெயில் மறியல் போராட்டத்துக்கு முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
அப்போது போலீசாருக்கும், மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு திடீர் பரபரப்பு உருவானது.
இதனையடுத்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவர் சங்க மாநில துணைத்தலைவர் நிர்பன் சக்ரவர்த்தி, மாவட்ட செயலாளர் தினேஷ்குமார் மற்றும் 6 மாணவிகள் உள்பட 36 பேரை கைது செய்தனர். அவர்கள் கோவையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
மாணவர் போராட்டத்தால் கோவையில் திடீர் பதற்றம் ஏற்பட்டது. மேலும் பல்வேறு அமைப்புகளும் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளன. இதைத்தொடர்ந்து கோவை முழுவதும் பலத்த பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
Related Tags :
Next Story