மேகதாது அணை விவகாரம்: மத்திய அரசு சாதகமான பதில் ; முதல்-மந்திரி எடியூரப்பா தகவல்
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்திற்கு மத்திய அரசு சாதகமான பதிலை அளித்து இருப்பதாக முதல்-மந்திரி எடியூரப்பா தெரிவித்தார்.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் குடகில் உற்பத்தியாகும் காவிரி ஆறு மைசூரு, மண்டியா வழியாக தமிழகத்திற்குள் பாய்ந்தோடுகிறது. காவிரியின் குறுக்கே கர்நாடகத்தில் கிருஷ்ணராஜ சாகர் அணை கட்டப்பட்டு உள்ளது. இந்த அணை மற்றும், கபினி அணையில் இருந்து வெளியேறும் தண்ணீர் சமவெளி, மலைப்பகுதிகளை கடந்து பிலிகுண்டுலு என்ற இடத்தில் தமிழக எல்லைக்குள் செல்கிறது. பிலிகுண்டுலுவில்தான், காவிரியில் தமிழகத்துக்கு எவ்வளவு தண்ணீர் செல்கிறது என்று அளவிடப்படுகிறது.
இந்த நிலையில் பிலிகுண்டுலுவுக்கு முன்பு அதாவது ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகாவில் உள்ள மேகதாது என்ற இடத்தில் காவிரியின் குறுக்கே புதிதாக ஒரு அணையை கட்டுவதற்கு கர்நாடக அரசு முடிவு செய்து இருக்கிறது. அதாவது மேகதாது அணைத்திட்டத்தை கர்நாடக அரசு செயல்படுத்த முன்வந்து உள்ளது. இந்த திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்த நிலையில் மத்திய ஜல்சக்தித்துறை மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத் நேற்று கர்நாடகம் வந்தார். பெங்களூருவில் அவரை முதல்-மந்திரி எடியூரப்பா நேரில் சந்தித்து, கர்நாடகத்தில் உள்ள நீர்ப்பாசன திட்டங்கள் குறித்து ஒரு கோரிக்கை மனுவை கொடுத்தார். இந்த சந்திப்பு குறித்து முதல்-மந்திரி எடியூரப்பா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
“கர்நாடகத்தில் பல்வேறு நீர்ப்பாசன திட்டங்கள் குறித்து மத்திய ஜல்சக்தித்துறை மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத்தை நேரில் சந்தித்து பேசினேன். இந்த பேச்சுவார்த்தை பயனுள்ள வகையில் இருந்தது. முக்கியமாக 5 விஷயங்கள் அவரிடம் எடுத்து கூறப்பட்டன. இவை எல்லாவற்றுக்கும் தீர்வு காண்பதாக மத்திய மந்திரி உறுதியளித்துள்ளார்.
இவற்றில் முக்கியமாக கிருஷ்ணா, காவிரி, கோதாவரி மற்றும் பெண்ணாறு (தென்பெண்ணை) ஆகிய ஆறுகளை இணைக்க வேண்டும். இதன் மூலம் கர்நாடகத்திற்கு அதிக நீர் கிடைக்கும். எனவே இந்த ஆறுகளை இணைக்கும் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். இந்த திட்டத்தை மிக விரைவில் அமல்படுத்துவதாக மத்திய மந்திரி உறுதியளித்துள்ளார். ஆறுகளை இணைக்கும் திட்டத்தை அமல்படுத்துவதில் பிரதமர் மோடி தீவிரமாக உள்ளதாக அவர் தெரிவித்தார்.
கர்நாடகத்தில் நாராயணபுரா இதுகால்வாய், கிருஷ்ணா மேல் அணை உள்ளிட்ட பல்வேறு நீர்ப்பாசன திட்டங்களுக்கு ரூ.439 கோடி நிதியை விரைவில் ஒதுக்குவதாக மத்திய மந்திரி உறுதியளித்தார். மேலும் பெங்களூரு நகருக்கு குடிநீர் வழங்கும் மேகதாது அணை திட்டத்திற்கு விரைவில் அனுமதி வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்.
இதற்கு ஒப்புதல் வழங்க சட்ட ரீதியாக எந்த தடங்கலும் இல்லை என்பதால் ஒப்புதல் வழங்குமாறு கேட்டுக் கொண்டேன். இந்த கோரிக்கைக்கு மத்திய ஜல்சக்தித்துறை மந்திரி சாதகமான பதிலை கூறி இருக்கிறார். மேலும் மகதாயி, கிருஷ்ணா நடுவர் மன்ற தீர்ப்புகளை அரசிதழில் வெளியிடுமாறு கேட்டுக் கொண்டேன். இதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.”
இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story