சந்தைப்பேட்டை ஊருணியில் தண்ணீர் நிரப்பும் பணி


சந்தைப்பேட்டை ஊருணியில் தண்ணீர் நிரப்பும் பணி
x
தினத்தந்தி 17 Dec 2019 3:30 AM IST (Updated: 17 Dec 2019 2:26 AM IST)
t-max-icont-min-icon

சந்தைப்பேட்டை ஊருணியில் தண்ணீர் நிரப்பும் பணி நடந்துவருகிறது.

தொண்டி,

திருவாடானையில் சந்தைப்பேட்டை ஊருணி உள்ளது. இந்த ஊருணி முழுமையாக நிறைந்தால் இப்பகுதி மக்களுக்கு பெரிதும் பயனாக இருக்கும். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த ஊருணி தூர்வாரப்பட்டது. அதன் பின்னர் நல்ல மழை பெய்தும் இந்த ஊருணியில் தண்ணீர் நிரம்பவில்லை. காரணம் இந்த ஊருணிக்கு தண்ணீர் வரும் வரத்துக்கால்வாய் தூர்ந்து போனதுடன், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் ராமநாதபுரம் மாவட்டத்தில் நீர் நிலைகளை நிரப்ப உத்தரவிட்டதன் பேரில் திருவாடானை தாசில்தார் சேகர், வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜகோபாலன், ஊராட்சி செயலாளர் மீனாட்சி சுந்தரம் ஆகியோர் திருவாடானை இளைஞர்களின் பெரும் ஒத்துழைப்போடு முதல் கட்டமாக திருவாடானை கண்மாயில் இருந்து 3 என்ஜின்கள் மூலம் பழமை வாய்ந்த ஆதிரெத்தினேசுவரர் கோவில் வருண தீர்த்த தெப்பகுளத்திற்கு தண்ணீரை கொண்டு வந்து சேர்த்தனர்.

அதனைத்தொடர்ந்து தெப்பக்குளத்தில் இருந்து 2 மோட்டார் என்ஜின்கள் மூலம் சுமார் ½ கிலோ மீட்டர் தூரத்திற்கு குழாய்கள் மூலம் சந்தைப்பேட்டை ஊருணிக்கு தண்ணீர் கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இரவு பகலாக சந்தைபேட்டை ஊருணியில் தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது. இதன் மூலம் தற்போது சந்தப்பேட்டை ஊருணி நிரம்பி வருகிறது.

இந்த பணியை திருவாடானை தாசில்தார் சேகர், போலீஸ் துணை சூப்பிரண்டு புகழேந்தி கணேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உம்முல் ஜாமியா, ராஜகோபாலன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.


Next Story