நெல்லை சந்திப்பில் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு - ரெயில் மறியலுக்கு முயன்ற 42 மாணவர்கள் கைது


நெல்லை சந்திப்பில் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு - ரெயில் மறியலுக்கு முயன்ற 42 மாணவர்கள் கைது
x
தினத்தந்தி 16 Dec 2019 10:45 PM GMT (Updated: 16 Dec 2019 10:01 PM GMT)

நெல்லை சந்திப்பில் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய 42 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

நெல்லை, 

தேசிய குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மாணவர் சங்கம் சார்பில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி நெல்லை டவுன் போலீஸ் உதவி கமி‌‌ஷனர் சதீ‌‌ஷ்குமார், இன்ஸ்பெக்டர் வனசுந்தர் ஆகியோர் தலைமையில் ரெயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. சந்திப்பு ரெயில் நிலையத்துக்குள் யாரும் நுழைய முடியாத வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டன.

இந்த நிலையில் இந்திய மாணவர் சங்க நெல்லை மாவட்ட தலைவரும் மத்திய குழு உறுப்பினருமான சத்யா தலைமையில் அந்த அமைப்பினர் கொடிகளை ஏந்திக் கொண்டு ஊர்வலமாக சந்திப்பு ரெயில் நிலையம் நோக்கி வந்தனர். அவர்கள் அங்குள்ள நுழைவு வாசல் பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

அப்போது ரெயிலை மறிக்க ரெயில் நிலையத்துக்குள் மாணவர்கள் செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்ததால், இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் மாணவர்கள் அங்கேயே நின்று தேசிய குடியுரிமை சட்ட திருத்தத்தை கண்டித்தும், அதனை வாபஸ் பெற வலியுறுத்தியும் கோ‌‌ஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதையடுத்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். இதில் சத்யா மற்றும் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஜாய்சன், தலைவர் ஸ்ரீநாத், நிர்வாகிகள் வெற்றிவேல், பிரவீன் உள்பட 42 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள், ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

இதே போல் பாளையங்கோட்டையில் உள்ள சதக்கத்துல்லா அப்பா கல்லூரி மாணவர்கள் நேற்று குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் மாணவர்கள் பலர் கலந்து கொண்டு கண்டன கோ‌‌ஷங்கள் எழுப்பினர்.

Next Story