வாலமலையாறு அணை திட்டத்தின் கீழ் கால்வாய் மூலம் குளங்களுக்கு தண்ணீர் வர நடவடிக்கை எடுக்க வேண்டும் - தென்காசி கலெக்டரிடம், விவசாயிகள் மனு


வாலமலையாறு அணை திட்டத்தின் கீழ் கால்வாய் மூலம் குளங்களுக்கு தண்ணீர் வர நடவடிக்கை எடுக்க வேண்டும் - தென்காசி கலெக்டரிடம், விவசாயிகள் மனு
x
தினத்தந்தி 17 Dec 2019 4:00 AM IST (Updated: 17 Dec 2019 3:38 AM IST)
t-max-icont-min-icon

வாலமலையாறு அணை திட்டத்தின் கீழ் கால்வாய் மூலம் குளங்களுக்கு தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென்காசி கலெக்டரிடம், விவசாயிகள் மனு கொடுத்தனர்.

தென்காசி, 

தென்காசி சுப்பராஜா மஹால் திருமண மண்டபத்தில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் கல்பனா, தென்காசி உதவி கலெக்டர் பழனிகுமார் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

முகாம் தொடங்கியதில் இருந்தே ஏராளமான பொதுமக்கள் வரத் தொடங்கினர். கூட்டம் அதிகமாக இருந்ததால் அவர்களை போலீசார் வரிசையில் நிற்க ஏற்பாடு செய்தனர். பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

சங்கரன்கோவில் அருகே உள்ள குருவிகுளம் ஒன்றியத்தை சேர்ந்த கிராமமக்கள் கொடுத்த மனுவில், குருவிகுளம் ஒன்றியத்தில் இருந்த பழங்கோட்டை, சாயமலை, களப்பாளங்குளம், கரிசல்குளம், நாலாந்துலா, மருதங்கிணறு, உசிலங்குளம், மகேந்திரவாடி ஆகிய பஞ்சாயத்துகளை மேலநீலிதநல்லூர் ஒன்றியத்தில் இணைத்துள்ளார்கள். இதனால் இந்த 8 பஞ்சாயத்து கிராம மக்கள் க‌‌ஷ்டப்படுகிறார்கள். எனவே முன்பு இருந்தது போலவே குருவிகுளம் ஒன்றியத்தில் இருப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

நெட்டூர் பாரதியார் தெரு மற்றும் சாலை தெருவில் பொதுமக்கள் நடந்து செல்லும் பாதையில் சாக்கடை நீர் தேங்கி கிடக்கிறது. பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனை சீர் செய்து தருமாறு கேட்டுக் கொள்கிறோம் என அப்பகுதி மக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.

அகில இந்திய விவசாயிகள் மகாசபை செயலாளர் ஷேக் மைதீன் கொடுத்துள்ள மனுவில், வடகரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை, அரசு ஆஸ்பத்திரியாக தரம் உயர்த்த கோரி மனு கொடுத்துள்ளார்.

ஆலங்குளம் ஒன்றியம் துத்திக்குளம் பகுதி மக்கள் கொடுத்த மனுவில், துத்திக்குளம் முப்புடாதி அம்மன் கோவில் பகுதியில் 600 குடும்பங்கள் வசித்து வருகிறோம். எங்களுக்கு ரே‌‌ஷன் கடை மற்றும் தேர்தல் வாக்குச்சாவடிக்கு குருவன்கோட்டைக்கு 6 கிலோமீட்டர் தூரம் செல்ல வேண்டியுள்ளது. எனவே எங்கள் பகுதியை சிவகாமிபுரம் என்ற துத்திக்குளம் பகுதி 1-வது வார்டுக்கு மாற்றித் தர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

கடையநல்லூர் தாலுகா திருவேட்டநல்லூர் கிராம விவசாய சங்கத்தினர் கொடுத்த மனுவில், பொதுப்பணித் துறையைச் சார்ந்த கலிங்கன் குளம், அடைக்கலப்பேரி குளம், சங்கரன் கோவில் யூனியனை சேர்ந்த சங்கரன்குளம், திருமேனிகுளம், கருவேலங்குளம், அரசுடையார் குளம் ஆகியவற்றிற்கு கருப்பாநதி அணை அல்லது வாலமலையாறு அணை திட்டத்தின்கீழ் கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவட்ட செய்தி தொடர்பாளர் சந்திரன் கொடுத்துள்ள மனுவில், தென்காசி 10-வது வார்டு தாழ்த்தப்பட்ட தனிவார்டாக இருந்தது. தற்போது மறுசீரமைப்பு செய்ததில் 9-வது வார்டாக அரசு அறிவித்து எஸ்.சி. தனி வார்டு அந்தஸ்தை அதிகாரிகள் ரத்து செய்துள்ளனர். இதனால் தாழ்த்தப்பட்ட சமுதாய மக்கள் இரண்டாக பிரிந்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே மீண்டும் எஸ்.சி. தனிவார்டாக அமைத்துத்தர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. முன்னதாக அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அம்பை தாலுகா தெற்கு மடத்தூர் அருகில் உள்ள வள்ளியம்மாள்புரம் வடக்கு தெருவைச் சேர்ந்த சரவணன் என்பவர் கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், தனக்கு கொலை மிரட்டல் கொடுப்பதாகவும் 5 பேர் மீது புகார் செய்து மனு கொடுத்தார்.

மேலும் மாற்றுத்திறனாளி களிடம் நேரடியாக சென்று கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் மனு வாங்கினார்.

Next Story