சமூக பாதுகாப்பு திட்டத்தில் ரூ.30 லட்சம் கையாடல்: வாலிபரை காவலில் எடுத்து போலீசார் விசாரணை


சமூக பாதுகாப்பு திட்டத்தில் ரூ.30 லட்சம் கையாடல்: வாலிபரை காவலில் எடுத்து போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 17 Dec 2019 4:00 AM IST (Updated: 17 Dec 2019 3:57 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாவட்ட சமூக பாதுகாப்பு திட்டத்தில் ரூ.30 லட்சம் கையாடல் செய்த வழக்கில் கோர்ட்டில் சரண் அடைந்த வாலிபரை போலீஸ் காவலில் எடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

திருப்பூர், 

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சமூக பாதுகாப்பு திட்ட பிரிவு செயல்பட்டு வருகிறது. முதியோர் உதவித்தொகை உள்ளிட்டவை தகுதியானவர்களுக்கு இந்த பிரிவு மூலம் அவரவர் வங்கிக்கணக்கில் செலுத்தப்படுகிறது.

கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் சமூக பாதுகாப்பு திட்ட பிரிவில் மூத்த வருவாய் ஆய்வாளராக சுரேஷ்குமார் பணியாற்றினார். அப்போது அவர் சமூக பாதுகாப்பு திட்ட பிரிவில் உள்ள ரூ.30 லட்சத்தை முறைகேடாக சிலரின் வங்கிக்கணக்குக்கு அனுப்பி வைத்து கையாடலில் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சுரேஷ்குமார் மற்றும் அவருடைய நண்பர்களான செல்வக்குமார், வினோத், வெங்கடேசன் உள்பட 7 பேர் மீது மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் வருவாய் ஆய்வாளர் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். வினோத்தை தேடி வந்தனர்.

இந்தநிலையில் செல்வக்குமாரின் உறவினரான திருச்சியை சேர்ந்த வினோத்(வயது 24) கடந்த 5-ந் தேதி திருப்பூர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண்.4-ல் சரண் அடைந்தார். அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு போலீசார் கோர்ட்டில் மனு செய்தனர்.அதன்படி 2 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி அளித்ததை தொடர்ந்து வினோத்தை நேற்று திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து வருகிறார்கள்.

Next Story