நாகர்கோவில் அருகே துணிகரம்: சிவன் கோவிலில் சாமி சிலை கொள்ளை
நாகர்கோவில் அருகே சிவன் கோவிலின் கதவை உடைத்து சாமி சிலையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இந்த துணிகர சம்பவம் குறித்து போலீசில் கூறியதாவது:-
மேலகிருஷ்ணன்புதூர்,
நாகர்கோவில் அருகே உள்ள சொத்தவிளையை அடுத்த ஒசரவிளையில் குமரேசன் தாழை என்ற சிவன் கோவில் உள்ளது. இந்த கோவில் மிகவும் பழமையானது ஆகும். இங்கு சிவன், பெருமாள் சன்னதிகள் உள்ளன.
இந்த கோவிலில் தினமும் காலை 6 மணிக்கு நடை திறந்து பூஜை நடைபெறும். இங்கு பூசாரியாக ராஜேஷ் (வயது 28) என்பவர் உள்ளார். அவர் இல்லாத நேரங்களில், அவருடைய தாத்தா ராமன், கோவிலில் பூஜை நடத்துவது வழக்கம்.
அதன்படி நேற்று காலை ராமன் கோவிலின் முன்பக்க கதவை திறந்து உள்ளே சென்ற போது, கோவிலின் பக்கவாட்டு கதவு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
கோவிலின் உள்ளே சென்று பார்த்த போது, அங்கு பெருமாள் சன்னதியில் வைத்திருந்த வெண்கல முருகன் சிலையை காணவில்லை. மர்மநபர்கள் யாரோ கோவில் கதவை உடைத்து உள்ளே புகுந்து சாமி சிலையை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. 1¾ அடி உயரம் கொண்ட முருகன் சிலையின் எடை 12 கிலோ ஆகும்.
இந்த கொள்ளை குறித்து சுசீந்திரம் போலீசில் ராஜேஷ் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். கைரேகை நிபுணர்கள் வந்து அங்கு பதிவான கைரேகைகளை பதிவு செய்தனர்.
இந்த கோவிலில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் சொத்தவிளை கடல் அருகில் தர்மபதி உள்ளது. அதன் முன்பக்க இரும்பு கதவில் 2 பூட்டுகள் பூட்டப்பட்டு இருந்தன. அதில் ஒன்றை மர்ம நபர்கள் உடைத்துள்ளனர். இன்னொரு பூட்டை உடைக்க முடியாததால், மர்ம நபர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். கொள்ளை முயற்சி நடந்த கோவிலையும் போலீசார் பார்வையிட்டனர்.
ஏற்கனவே நாகர்கோவில் அருகே பறக்கை பகுதியில் உள்ள பெருஞ்சடை மகாதேவர் கோவிலில் இருந்த நாகர்சிலை கொள்ளை போனது. அதைத்தொடர்ந்து கோதை கிராமம் சபரிஅணை முத்து பேச்சியம்மன் கோவிலில் உண்டியல் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து சிவன் கோவிலில் நடந்திருப்பது 3-வது சம்பவம் ஆகும்.
கொள்ளையர்கள் தொடர்ச்சியாக கோவில்களை குறி வைத்து கைவரிசை காட்டி உள்ளனர். அடுத்தடுத்து கொள்ளை சம்பவங்கள் நடந்து இருப்பதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே கொள்ளை மேலும் நடைபெறாமல் தடுப்பதுடன், சாமி சிலைகளை தூக்கி சென்றவர்களை கைது செய்ய வேண்டும். மேலும் போலீஸ் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்துகிறார்கள்.
Related Tags :
Next Story