சேலத்தில் துணிகரம்: நள்ளிரவில் வீடுகளுக்குள் புகுந்து கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர்


சேலத்தில் துணிகரம்: நள்ளிரவில் வீடுகளுக்குள் புகுந்து கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர்
x
தினத்தந்தி 17 Dec 2019 4:15 AM IST (Updated: 17 Dec 2019 4:10 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் நள்ளிரவில் வீடுகளுக்குள் புகுந்து கத்தியைகாட்டி மிரட்டிய வாலிபரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

சேலம், 

சேலம் பெரமனூர் 40 அடி ரோடு அருகே உள்ள கோவிந்த பிள்ளைக்காடு பகுதியை சேர்ந்தவர் சத்தி (வயது 32). இவர் மிக்சி, கிரைண்டர் போன்ற வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் மனைவி மற்றும் குழந்தையுடன் படுத்து தூங்கிக்கொண்டிருந்தார்.

அப்போது வாலிபர் ஒருவர் வீட்டு சுவரில் ஏறி ஜன்னல் வழியாக கையை விட்டு உள்பக்க கதவை திறந்து வீட்டிற்குள் புகுந்து உள்ளார். பின்னர் சத்தியின் கால் பகுதியில் சிறிது நேரம் உட்கார்ந்து இருந்தார்.

இந்த நிலையில் சத்தியின் மனைவி திடீரென்று கண் விழித்து உள்ளார். அப்போது எதிரே ஒருவர் உட்கார்ந்து இருப்பதை பார்த்து திடுக்கிட்டார். இதனால் அவர் சத்தம் போட்டார். இதில் சத்தியும் விழித்துக்கொண்டார். பின்னர் இருவரும் திருடன், திருடன் என சத்தம் போட்டனர்.

அப்போது வாலிபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து காண்பித்து கணவன், மனைவி இருவரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளார். இதனால் பயந்து போன அவர்கள் சிறிது நேரம் அமைதியாக இருந்தனர். பின்னர் அவரை பிடிக்க முயன்றனர்.

அப்போது வாலிபர் மீண்டும் கத்தியை எடுத்து அவர்களிடம் காண்பித்து மிரட்டி உள்ளார். இதனால் அவரை பிடிக்க தயங்கினர். இதை பயன்படுத்திக்கொண்ட மர்ம ஆசாமி அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.

பின்னர் அவர் அருகில் உள்ள 2 வீடுகளிலும் புகுந்து உள்ளார். அங்கு இருந்தவர்களும் விழித்துக்கொண்டதால் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். பின்னர் அவர் 40 அடி ரோட்டில் உள்ள ஒரு தனியார் பெண்கள் தங்கும் விடுதியில் ஏறி உள்ளார். இதை அங்கு தங்கி உள்ள பெண்கள் சிலர் பார்த்து சத்தம் போட்டனர்.

இதனால் அந்த பகுதியில் வசிக்கும் பலர் வீட்டில் இருந்து எழுந்து வெளியில் வந்து பார்த்தனர். பின்னர் நடந்த சம்பவங்களை கேள்விப்பட்டதும் துரத்தி சென்று வாலிபரை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் இது குறித்து பள்ளப்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரை மீட்டு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் வாழப்பாடி அருகே உள்ள நீர்முள்ளிக்குட்டை பகுதியை சேர்ந்த சின்னராஜ் (36) என்பது தெரிய வந்தது. இதையொட்டி போலீசார் சின்னராஜை கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர்.இதனிடையே பொதுமக்கள் தர்ம அடி கொடுத்ததில் காயம் அடைந்த சின்னராஜ் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். நள்ளிரவில் நடந்த இந்த துணிகர சம்பவம் பெரமனூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story