நாட்டிலேயே சிறந்த ஊராட்சியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மொழுகம்பூண்டியில் குடிநீர், சாலை வசதி இல்லாத அவலம் - ‘‘எந்த வசதியும் இல்லாமல் சிறந்த ஊராட்சியா?’’ கலெக்டரிடம் பொதுமக்கள் சரமாரி கேள்வி


நாட்டிலேயே சிறந்த ஊராட்சியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மொழுகம்பூண்டியில் குடிநீர், சாலை வசதி இல்லாத அவலம் - ‘‘எந்த வசதியும் இல்லாமல் சிறந்த ஊராட்சியா?’’ கலெக்டரிடம் பொதுமக்கள் சரமாரி கேள்வி
x
தினத்தந்தி 16 Dec 2019 10:45 PM GMT (Updated: 16 Dec 2019 10:43 PM GMT)

நாட்டிலேயே சிறந்த ஊராட்சியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மொழுகம்பூண்டியில் சாலை, குடிநீர் வசதிகள் இல்லை. ‘‘எந்த வசதியும் இல்லாமல் சிறந்த ஊராட்சியா?’’ என்று கலெக்டரிடம் பொதுமக்கள் சரமாரி கேள்வி எழுப்பினர்.

ஆரணி, 

மத்திய அரசால் ‘மி‌‌ஷன் அந்தியோதயா’ திட்டத்தின் கீழ் சிறப்பாக செயல்பட்டதாக திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மொழுகம்பூண்டி கிராம ஊராட்சி தேர்வு செய்யப்பட்டு முதலிடம் பிடித்துள்ளது. இந்தநிலையில் அந்த கிராமத்திற்கு மாவட்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி திடீரென வருகை புரிந்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது கலெக்டர், ‘இந்த கிராமத்தில் இந்திய அளவில் அரசால் வழங்கப்படுகிற திட்டங்கள் முழுமையாக நிறைவேற்றப்பட்டதாகவும், அதற்காக இக்கிராமத்தை மத்திய அரசு சிறந்த ஊராட்சியாக தேர்வு செய்துள்ளதாகவும், இக்கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை உருவாக்கி மாதிரி கிராமமாக தேர்வு செய்து பட்டியல் தயாரிக்கப்படும்’ என்றார்.

அதைத்தொடர்ந்து அவர், அங்குள்ள தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களை அழைத்து துண்டு பிரசுரங்களை கொடுத்து வாசிக்க செய்தார். மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை வைத்துள்ளனரா?, முதியோர் உதவித்தொகை வழங்கப்படுகிறதா?, முழு சுகாதாரம் குறித்து அனைத்து வீடுகளிலும் தனிநபர் கழிப்பறை கட்டுப்பட்டுள்ளதா? என ஒவ்வொரு பகுதியிலும் தனித்தனியாக பொதுமக்களிடம் விசாரித்தார். அப்போது பொதுமக்கள் கலெக்டரிடம் புகார் மனுக்கள் அளித்தனர்.

அப்போது அக்கிராம மக்கள், தங்களுடைய கிராமம் சிறந்த ஊராட்சியாக தேர்வு செய்யப்பட்டதை பத்திரிகைகளை பார்த்து தெரிந்து கொண்டோம். எங்கள் ஊரில் குடிநீர், சாலை வசதி இல்லை. அடிப்படை தேவைகளுக்காக 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஆரணிக்கு செல்ல வேண்டும். பள்ளி, கல்லூரிகளுக்கும் அங்கு தான் செல்ல வேண்டும். போக்குவரத்து வசதியும் போதுமானதாக இல்லை. எனவே சாலை, குடிநீர், போக்குவரத்து, மருத்துவம் போன்ற அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். அடிப்படை வசதி இல்லாத மொழுகம்பூண்டி எப்படி சிறந்த ஊராட்சியாக தேர்வு செய்யப்பட்டது? என கேள்விகளை கலெக்டரிடம் பொதுமக்கள் சரமாரியாக எழுப்பினர்.

பின்னர் அவர்களுக்கு பதில் அளித்த கலெக்டர் உங்களுடைய புகார்கள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இந்த ஆய்வின் போது அரசு அதிகாரிகள் உடன் சென்றனர்.

Next Story