பி.எம்.சி. வங்கி முறைகேடு வழக்கு : ரியல் எஸ்டேட் நிறுவன இயக்குனர்கள் மீது குற்றப்பத்திரிகை
பி.எம்.சி. வங்கி முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட எச்.டி.ஐ.எல். ரியல் எஸ்டேட் நிறுவன இயக்குனர்கள் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
மும்பை,
மும்பையை தலைமையிடமாக கொண்டு சுமார் 16 லட்சம் வாடிக்கையாளர்களுடன் செயல்பட்டு வந்த பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு (பி.எம்.சி.) வங்கியில் ரூ.4,355 கோடி முறைகேடு நடந்தது வெளிச்சத்துக்கு வந்தது. இதை அடுத்து ரிசர்வ் வங்கி கடந்த செப்டம்பர் மாதம் அந்த வங்கியின் செயல்பாடுகளை 6 மாதத்திற்கு முடக்கியது.
இந்த முறைகேடு தொடர்பாக மும்பை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் மற்றும் அமலாக்கத்துறை தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து உள்ளன. இந்த வழக்கில் பி.எம்.சி. வங்கி அதிகாரிகள் மற்றும் அந்த வங்கியில் அதிக அளவில் கடன் வாங்கி மோசடி செய்த எச்.டி.ஐ.எல். ரியல் எஸ்டேட் நிறுவன இயக்குனர்கள் என 12 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
எச்.டி.ஐ.எல். ரியல் எஸ்டேட் நிறுவன நிர்வாக இயக்குனர்களான ராகேஷ் வாதாவன், அவரது மகன் சாரங் ஆகியோர் மீது அமலாக்கத்துறை சட்டவிரோத பணபரிவர்த்தனை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தது. மேலும் மும்பை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் விசாரணையில் இருந்த இருவரையும் அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரித்தது.
இந்தநிலையில், நேற்று அவர்கள் இருவர் மீதும் மும்பையில் உள்ள சட்டவிரோத பணபரிவர்த்தனை தடுப்பு சட்ட சிறப்பு கோர்ட்டில் 7 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை அமலாக்கத்துறை தாக்கல் செய்தது.
Related Tags :
Next Story