சிவகாசியில், வேட்பு மனு பரிசீலனையின்போது கட்சி பிரமுகர்கள் கடும் வாக்குவாதம்


சிவகாசியில், வேட்பு மனு பரிசீலனையின்போது கட்சி பிரமுகர்கள் கடும் வாக்குவாதம்
x
தினத்தந்தி 18 Dec 2019 3:45 AM IST (Updated: 17 Dec 2019 6:56 PM IST)
t-max-icont-min-icon

சிவகாசி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கான வேட்புமனு பரிசீலனையின் போது அரசியல் கட்சி பிரமுகர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

சிவகாசி,

சிவகாசி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் 1 லட்சத்து 90 ஆயிரம் வாக்காளர்கள் வசித்து வரும் நிலையில் 54 பஞ்சாயத்து தலைவர்கள் பதவிகள், 429 பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் பதவிகள் இருக்கிறது. 31 ஒன்றிய கவுன்சிலர் பதவிகள், 3 மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் இடங்களும் இருக்கிறது. இதில் மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் பதவிக்கு 29 பேரும், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 289 பேரும், பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு 342 பேரும், பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கு 1344 பேரும் மனு தாக்கல் செய்திருந்தனர்.

சிவகாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று காலை மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டது. இதனால் யூனியன் அலுவலகத்தில் வேட்பாளர் குவிந்து இருந்தனர். அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வினர் அதிக இடங்களில் போட்டியிட மனு தாக்கல் செய்து இருந்ததால் 2 கட்சிகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் மற்றும் வக்கீல் அணியை சேர்ந்தவர்கள் வேட்புமனு பரிசீலனையின் போது உடன் இருந்தனர். வேட்புமனு பரிசீலனையை சிவகாசி சப்–கலெக்டர் தினே‌ஷக்குமார் பார்வையிட்டார்.

சிவகாசி ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு தி.மு.க.வை சேர்ந்த ஒருவர் வேட்புமனு தாக்கல் செய்து இருந்தார். அவரது மனு பரிசீலனைக்கு வந்த போது அவரது பெயருக்கு ஆட்சேபனை தெரிவித்து அ.தி.மு.க. தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும் தி.மு.க. வேட்பாளரின் பெயர் 2 இடங்களில் உள்ளதாக குற்றம்சாட்டப்பட்டது. இதை தொடர்ந்து அவரது மனுவை தள்ளுபடி செய்யவேண்டும் என ஒரு சிலர் கோரிக்கை வைத்தனர். அதற்கு தி.மு.க. ஒன்றிய செயலாளர் விவேகன்ராஜ் எதிர்ப்பு தெரிவித்து உரிய விளக்கம் அளித்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தி.மு.க., அ.தி.மு.க. பிரமுகர்கள் கடும் வாக்குவாதம் செய்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட சப்–இன்ஸ்பெக்டர் முத்துமாரியப்பன் இருதரப்பினரையும் விலக்கிவிட்டார்.

 பின்னர் அடுத்தடுத்த மனுக்கள் பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஒரு சில மனுக்களுக்கு எதிராக எதிர்தரப்பினர் குற்றச்சாட்டு கூறியதால் தொடர்ந்து அந்த அரங்கம் பரபரப்பாகவே காணப்பட்டது. இதே போல் சித்துராஜபுரம் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிடும் மல்லிகாபாலாஜி எனபவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என ஒரு சிலர் கோரிக்கை வைத்தனர். அந்த கோரிக்கையை ஏற்றுக்கொள்ளக்கூடாது என மல்லிகாபாலாஜி உரிய விளக்கம் அளித்தார். வேட்புமனு பரிசீலனையின் போது ஒரே நேரத்தில் 500–க்கும் மேற்பட்டவர்கள் யூனியன் அலுவலகத்தில் குவிந்ததால் சிவகாசி துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரன் தலைமையில்

போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அலுவலகம் வந்த அனைவரையும் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதித்தனர்.

Next Story