வைகை தண்ணீரை நாட்டார் கால்வாய்க்கு திறக்க வேண்டும் - 16 கிராம மக்கள் வலியுறுத்தல்
மானாமதுரை வட்டாரத்தில் 16 கிராம மக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு வைகை தண்ணீரை நாட்டார் கால்வாயில் திறக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மானாமதுரை,
மானாமதுரையைச் சுற்றியுள்ள அன்னவாசல் ஆர்.புதூர், வளநாடு, கிளங்காட்டூர் உள்ளிட்ட கிராமங்கள் வழியாக நாட்டார் கால்வாய் செல்கிறது. கிருங்காக்கோட்டை வைகை ஆற்று முகப்பில் இருந்து பிரியும் நாட்டார் கால்வாய் பாசனம் மூலம் 16 கிராமங்கள் பயன் பெறுகின்றன. இந்த நிலையில் கடும் வறட்சி காரணமாக 16 கிராமங்களிலும் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. நிலத்தடி நீர்மட்டம் குறைந்துவிட்டதால் ஆழ்துளை கிணற்று நீரும் உவர்ப்பு நீராக மாறிவிட்டது. மேலும் விவசாயம் செய்ய முடியாத நிலை உள்ளது. கால்நடைகளுக்கு கூட தண்ணீர் இல்லாததால் பெரும்பாலான கிராம மக்கள் பிழைப்பு தேடி வெளியூர் சென்று விட்டனர். ஒருசிலர் மட்டும் கட்டிட பணி, செங்கல் சூளையில் பணி செய்வதன் காரணமாக கிராமங்களில் தங்கியுள்ளனர்.
இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், வைகை ஆற்றில் இருந்து நாட்டார் கால்வாயில் தண்ணீர் திறக்க வேண்டும் என்பது எங்களின் நீண்ட கால கோரிக்கை. ஆனால் இதுவரை தண்ணீர் திறக்க அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. வைகை அணையில் 65 அடிக்கு மேல் தண்ணீர் உள்ள நிலையில் கிருதுமால் நதியில் கடந்த பத்து நாட்களாக 450 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அதேபோல எங்களுக்கும் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு தண்ணீர் திறக்க வேண்டும். 16 கிராமங்களிலும் கால்நடைகள் வளர்க்க மட்டுமாவது கண்மாயில் தண்ணீர் தேங்க வேண்டும். கண்மாயில் தண்ணீர் இல்லாததால் கால்நடை வளர்ப்பு குறைந்து விட்டது. எனவே இனியாவது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து 16 கிராம மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
Related Tags :
Next Story