பெரம்பலூர், அரியலூரில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தி.மு.க. ஆர்ப்பாட்டம்
பெரம்பலூர், அரியலூரில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. சார்பில் சிறுபான்மையினர், ஈழத்தமிழர்களுக்கு எதிரான குடியுரிமை சட்டத்தை இயற்றியுள்ள மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்தும், அதற்கு துணை போகும் அ.தி.மு.க. அரசை கண்டித்தும் பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் காந்தி சிலை அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் குன்னம் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். இதில் கழக கொள்கை பரப்பு செயலாளரும், நீலகிரி தொகுதி எம்.பி.யுமான ஆ.ராசா கலந்து கொண்டு, ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
இந்தியாவின் உள் உற்பத்தி (ஜி.டி.பி.) மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது 10 சதவீதமாக இருந்தது. தற்போது 4.5 சதவீதமாக குறைந்துவிட்டது. பாராளுமன்ற மேலவை அ.தி.மு.க. எம்.பி.க்களின் ஆதரவுடன் இந்திய குடியுரிமை மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அ.தி.மு.க. ஈழத்தமிழர்களுக்கு எதிராக செயல்படுகிறது. அ.தி.மு.க. எம்.பி.க்கள் 40 பேர் பதவியில் இருந்தபோது எந்த எம்.பி.யும் தமிழக மக்களின் உரிமைகளுக்காக குரல்கொடுக்கவில்லை. ஆனால் நாங்கள் தமிழக மக்களின் நலனுக்கு எதிரானவற்றை முழுமையாக எதிர்த்து பாராளுமன்றத்தில் குரல்கொடுத்து வருகிறோம்.
22 சதவீதம் சிறுபான்மையின மக்கள் வசிக்கும் இந்தியாவை மதரீதியாக பிளவு படுத்தும் ஆட்சி மத்தியில் நடந்துகொண்டிருக்கிறது. இந்திய குடியுரிமை சட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளதற்கு ஐ.நா. சபை தனது அச்சத்தை பகிர்ந்து கொண்டுள்ளது. இந்த சட்டத்தை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக எதிர்த்து குரல்கொடுத்து வந்துள்ளார். தமிழ்நாட்டில் அகதிகளாக குடியேறியுள்ள இலங்கை தமிழர்களையும், இந்திய குடியுரிமை சட்டத்தின்கீழ் கொண்டுவந்து அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கவேண்டும்.
மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி இந்த சட்டத்தை அமல்படுத்துவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கேரளாவில் பினராயி விஜயன் கடுமையாக எதிர்க்கிறார். அஸ்ஸாம், மேகாலயா, திரிபுரா போன்ற வடகிழக்கு மாநிலங்கள் பற்றிஎரிகின்றன. கடந்த ஓரிரு தினங்களாக ஆங்கிலம், தமிழ் உள்பட அனைத்து பத்திரிகைகளிலும் இந்திய குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்டுரைகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இவ்வாறு ஒட்டுமொத்த தேசமும் எதிர்க்கும் குடியுரிமை சட்டத்தை பா.ஜ.க. அரசு கைவிடவேண்டும். மதவாதத்தை ஒழிப்போம். குடியுரிமை சட்டத்தை முழுமையாக எதிர்ப்போம்
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மத்திய, மாநில அரசுக்கு எதிராக பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதில் தி.மு.க. மாநில நிர்வாகிகள் ஓவியர் முகுந்தன், வக்கீல் ராஜேந்திரன், துரைசாமி, டாக்டர் வல்லபன், மாவட்ட நிர்வாகிகள் தழுதாழை பாஸ்கர், ரவிச்சந்திரன், மகாதேவி, ஒன்றிய செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் அரியலூர் அண்ணா சிலை அருகில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சிவசங்கர் தலைமை தாங்கினார். நகர செயலாளர் முருகேசன் வரவேற்று பேசினார். கழக சட்ட திருத்த குழு உறுப்பினர் சந்திரசேகர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். மாவட்ட அவை தலைவர் துரைராஜ், மாட்ட துணை செயலாளர்கள் தனபால், கணேசன் மற்றும் ஒன்றிய, நகர, கிராம கிளை கழக அனைத்து அணி பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story