குடியுரிமை சட்டத்திருத்தத்தை கண்டித்து: ரிசர்வ் வங்கியை முற்றுகையிட முயன்ற - எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் கைது


குடியுரிமை சட்டத்திருத்தத்தை கண்டித்து: ரிசர்வ் வங்கியை முற்றுகையிட முயன்ற - எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் கைது
x
தினத்தந்தி 18 Dec 2019 3:00 AM IST (Updated: 18 Dec 2019 2:18 AM IST)
t-max-icont-min-icon

குடியுரிமை சட்டத்திருத்தத்தை கண்டித்து ரிசர்வ் வங்கியை முற்றுகையிட முயன்ற எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் கைது செய்தனர்.

பெரம்பூர்,

குடியுரிமை சட்டத்திருத்தத்தை கண்டித்தும், டெல்லியில் பல்கலைக்கழக மாணவர்கள் மீது நடத்திய தாக்குதலை கண்டித்தும் சென்னை பாரிமுனை ஐகோர்ட்டு மெட்ரோ ரெயில் நிலையம் அருகில் நேற்று மாலை எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ரிசர்வ் வங்கியை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தினர்.

அப்போது அவர்கள் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நகலை எரித்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். அதனைத் தொடர்ந்து போராட்டம் நடத்திய எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

அப்போது எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் பேசும்போது, இந்த குடியுரிமை சட்டத்திருத்த மசோதா அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. மத்திய அரசு உடனடியாக இந்த சட்டத்தை திரும்பப் பெற வேண்டும். இந்த சட்டத்திருத்த மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்த அ.தி.மு.க. அரசினை எஸ்.டி.பி.ஐ. கட்சி வன்மையாக கண்டிக்கிறது என்றும் தெரிவித்தார்,

இதையடுத்து, ரிசர்வ் வங்கியை முற்றுகையிட முயன்ற குழந்தைகள், பெண்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோரை பூக்கடை போலீஸ் துணை கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவின் பேரில், எசுபிளனேடு போலீஸ் உதவி கமிஷனர் விஜயராமுலு, போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் மற்றும் போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்து, பின்னர் விடுவித்தனர்.

அதேபோல், சென்னையை அடுத்த மேடவாக்கத்தில் உள்ள காயிதே மில்லத் கல்லூரி மாணவ-மாணவிகள் குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் டெல்லி மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஆகியவற்றை கண்டித்து வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்தும், டெல்லியில் மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்தும் சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் அருகே நேற்று மனிதநேய ஜனநாயக கட்சியின் இந்திய மாணவர் அமைப்பினர் எழும்பூர் ரெயில் நிலைய முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து எழும்பூர் ரெயில் நிலையத்தை முற்றுகையிட வந்த 30-க்கும் மேற்பட்ட மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.

Next Story