திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு 21,999 பேர் வேட்பு மனுதாக்கல்
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு 21 ஆயிரத்து 999 பேர் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனர்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டத்தில் வருகிற 27 மற்றும் 30-ந் தேதிகளில் 2 கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. 34 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், 341 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், 860 கிராம ஊராட்சி மன்ற தலைவர் பதவிகளுக்கும் மற்றும் 6207 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் வாக்குச் சீட்டு முறையில் தேர்தல் நடக்கிறது.
இந்த தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் கடந்த 9-ந் தேதி தொடங்கியது. நேற்று முன்தினம் மனு தாக்கல் நிறைவடைந்தது.
இதில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 255 பேரும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 2,127 பேரும், கிராம ஊராட்சி மன்ற தலைவர் பதவிகளுக்கு 4,250 பேரும், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 15,367 பேரும் என 21,999 பேர் வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளனர்.
கடைசி நாளான நேற்றுமுன்தினம் மட்டும் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 191 பேரும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 1,453 பேரும், கிராம ஊராட்சி மன்ற தலைவர் பதவிகளுக்கு 1,808 பேரும், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 8,727 பேரும் என 12,179 பேர் வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று வேட்பு மனுக்கள் பரிசீலனை நடந்தது. வேட்பு மனுக்கள் சரிபார்க்கும் பணியில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். திருவண்ணாமலை ஒன்றியத்தில் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்வதவர்கள் தங்கள் ஆதரவாளர்களுடன் திரண்டு காணப்பட்டனர். மாவட்டத்தில் உள்ள 18 ஒன்றியங்களில் நடந்த வேட்பு மனுக்கள் பரிசீலனையில் பெரும்பாலான மனுக்கள் ஏற்கப்பட்டது.
போட்டியில் இருந்து விலக விரும்புவோர் நாளை (வியாழக்கிழமை) வேட்பு மனுக்களை திரும்ப பெற்று கொள்ளலாம். அன்று மாலை வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும். தொடர்ந்து அங்கீகரிக்கப்படாத கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னங்களும் ஒதுக்கப்படும்.
தொடர்ந்து முதல் கட்ட தேர்தல் 27-ந்தேதியும், 2-ம் கட்ட தேர்தல் 30-ந் தேதியும் நடக்கிறது.
Related Tags :
Next Story