ஆட்டோ டிரைவரிடம் ரூ.200 கேட்ட விவகாரம் : சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் - போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை


ஆட்டோ டிரைவரிடம் ரூ.200 கேட்ட விவகாரம் : சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் - போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை
x
தினத்தந்தி 17 Dec 2019 11:15 PM GMT (Updated: 17 Dec 2019 9:26 PM GMT)

திருப்பூர் அருகே ஆட்டோ டிரைவரிடம் ரூ.200 கேட்ட விவகாரத்தில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜமூர்த்தியை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார்.

ஊத்துக்குளி, 

திருப்பூர் கூலிப்பாளையம் நால்ரோட்டை சேர்ந்தவர் அர்ஜூன் ராஜ். சரக்கு ஆட்டோ டிரைவர். இவர் நேற்று எஸ்.பெரியபாளையத்தில் இருந்து திருப்பூருக்கு ஆட்டோவில் 2 பிளாஸ்டிக் டிரம் மற்றும் இரும்பு கம்பிகளை ஏற்றி சென்று கொண்டிருந்தார்.

கூலிப்பாளையம் நால்ரோடு பகுதியில் போலீஸ் சோதனை சாவடியை கடக்க முயன்றபோது அங்கு பணியில் இருந்த ஊத்துக்குளி போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ராஜமூர்த்தி, ஆட்டோவை நிறுத்தி டிரைவர் அர்ஜூன் ராஜூவிடம், ஆவணங்களை கேட்டுள்ளார்.

இதையடுத்து அவர் ஆவணங்களை காட்டிய பிறகும், ரூ.200- கொடுக்குமாறு, சப்-இன்ஸ்பெக்டர் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் பணம் கொடுக்க மறுத்த ஆட்டோ டிரைவரை, சப்-இன்ஸ்பெக்டர் தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த ஆட்டோ டிரைவர் நடுரோட்டில் உடலில் டீசலை ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

மேலும் ஆட்டோ டிரைவருக்கு ஆதரவாக பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு திஷாமித்தல் விசாரணை நடத்தினார். விசாரணைக்கு பின்னர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ மூர்த்தியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.( முன் வந்த செய்தி 22-ம் பக்கம்).

Next Story