பாபர் மசூதியை இடிப்பது போன்று நாடகம் அரங்கேற்றம்: தனியார் பள்ளி நிர்வாகிகள் 5 பேர் மீது வழக்குப்பதிவு


பாபர் மசூதியை இடிப்பது போன்று நாடகம் அரங்கேற்றம்: தனியார் பள்ளி நிர்வாகிகள் 5 பேர் மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 18 Dec 2019 3:15 AM IST (Updated: 18 Dec 2019 3:15 AM IST)
t-max-icont-min-icon

பண்ட்வாலில் தனியார் பள்ளியில் பாபர் மசூதியை இடிப்பது போன்று மாணவ-மாணவிகள் நாடகம் அரங்கேற்றினர். இதுதொடர்பாக போலீசார், பள்ளி நிர்வாகிகள் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மங்களூரு,

தட்சிண கன்னடா மாவட்டம் பண்ட்வால் அருகே கல்லடுக்கா பகுதியில் ஸ்ரீராம வித்யாகேந்திரா எனும் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. விழாவில் புதுச்சேரி மாநில கவர்னர் கிரண் பெடி, மத்திய மந்திரி சதானந்தகவுடா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவையொட்டி பள்ளி மாணவ-மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. அந்த சந்தர்ப்பத்தில் ஒரு மாணவ-மாணவிகள் குழுவினர் பாபர் மசூதி இடிக்கப்பட்டதை நினைவுகூர்வது போல் நாடகத்தை அரங்கேற்றினர். மாணவ-மாணவிகள் இந்து அமைப்பினர்(கார் சேவாக்ஸ்) போன்று வேடமிட்டு கைகளில் ஆயுதங்கள் ஏந்தியபடி பாபர் மசூதியை இடிப்பது போன்றும், அனுமனின் சக்தியைப் பெற்று அவர்கள் பாபர் மசூதியை இடித்து தகர்ப்பது போன்றும் நாடகத்தில் அமைந்திருந்ததாக கூறப்படுகிறது.

மேலும் மாணவ-மாணவிகள் நாடகம் அரங்கேற்றும்போது பின்பகுதியில் “ஸ்ரீராமசந்திராவுக்கு ஜே, பாரத மாதாவுக்கு ஜே, அனுமானுக்கு ஜே என்று சொல்லுங்கள்“ என குரல் ஒலிக்கிறது. அப்போது மாணவ-மாணவிகள் துள்ளி குதித்து இந்து அமைப்புகளைச் சேர்ந்த கொடிகளை கைகளில் ஏந்தி ஆரவாரம் செய்கிறார்கள்.

தற்போது மாணவ-மாணவிகள் அரங்கேற்றிய அந்த நாடகத்தின் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரி கவர்னர் கிரண் பெடி தனது டுவிட்டர் பக்கத்தில் மாணவ-மாணவிகள் அரங்கேற்றிய நாடகத்தின் காட்சிகளை பதிவிட்டு அவர்களுக்கு பாராட்டு தெரிவித்து தன்னுடைய கருத்தை பதிவிட்டுள்ளார்.

அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், “மாணவ-மாணவிகள் கண்டிப்பாக புதுடெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் தங்களது திறமைகளை நிரூபிக்கும் வாய்ப்பை பெறுவார்கள். மேலும் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்று இந்த பள்ளி மாணவ-மாணவிகள் முன்மொழிகின்றனர்“ என்று பதிவிட்டுள்ளார்.

இதுபற்றி பள்ளி நிர்வாகி பிரபாகர் பட் கூறுகையில், “நமது வரலாற்றையும், தேசப்பற்றையும் தெரிவிப்பதாகவே இந்த நாடகம் அமைந்துள்ளது. எங்களது பள்ளி மாணவர்கள் ஒவ்வொரு வருடமும் பள்ளி ஆண்டு விழாவின்போது ஏதாவது பிரச்சினையை கையில் எடுத்து நாடகம் அரங்கேற்றுவார்கள். அதேபோல் இந்த ஆண்டு அவர்கள் அயோத்தியா பிரச்சினையை கையில் எடுத்து நாடகம் அரங்கேற்று உள்ளனர். அயோத்தியா பிரச்சினைக்கு சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மாணவ-மாணவிகள் அரங்கேற்றினர்“ என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் கல்லடுக்கா பகுதியைச் சேர்ந்த பாப்புலர் பிரண்ட்ஸ் ஆப் இந்தியா அமைப்பினர் நிர்வாகி அபுபக்கர் சித்திக் இச்சம்பவம் குறித்து பண்ட்வால் போலீசில் ஒரு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், “மாணவ-மாணவிகள் அரங்கேற்றிய நாடகம் மத உணர்வை புண்படுத்தும் வகையில் அமைந்துள்ளது“ என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் மாணவ-மாணவிகள் அரங்கேற்றிய பாபர் மசூதியை இடிப்பது போன்ற வீடியோ காட்சியையும் அவர் போலீசாரிடம் சமர்ப்பித்துள்ளார்.

அதன்பேரில் போலீசார் இச்சம்பவம் குறித்து ஸ்ரீராம வித்யாகேந்திரா பள்ளியின் நிர்வாகியும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நிர்வாகியுமான பிரபாகர் பட் உள்பட பள்ளி நிர்வாகிகள் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

இதுபற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு லட்சுமி பிரசாத் கூறிய தாவது:-

இந்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகிகள் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளோம். ஆனால் இதுவரையில் யாரையும் கைது செய்யவில்லை. விசாரணை நடந்து வருகிறது. மாணவ-மாணவிகள் அரங்கேற்றிய நாடகத்தில் 30 வினாடிகள் அடங்கிய வீடியோவில் மட்டுமே சர்ச்சைக்குரிய காட்சிகள் உள்ளன. அந்த வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறோம். மேலும் பல ஆதாரங்களை திரட்டி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story