தங்கை, மைத்துனரை ஆணவ கொலை செய்யும் திட்டம் தோல்வி: வாலிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை


தங்கை, மைத்துனரை ஆணவ கொலை செய்யும் திட்டம் தோல்வி: வாலிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
x
தினத்தந்தி 18 Dec 2019 4:24 AM IST (Updated: 18 Dec 2019 4:24 AM IST)
t-max-icont-min-icon

தங்கை, மைத்துனரை ஆணவ கொலை செய்ய முயன்ற வாலிபர், அந்த திட்டம் தோல்வி அடைந்ததால் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மும்பை, 

உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர் பட்டேஸ்வர் திவாரி(வயது32). இவரது தங்கை வந்தனா(20). இவர் கடந்த 6 மாதத்திற்கு முன் ரோகித் சிங்(26) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு, மும்பை பாந்திராவில் குடியேறினார். வேறு சாதி வாலிபரை திருமணம் செய்ததால் வந்தனாவுக்கு அவரது குடும்பத்தினர் மத்தியில் கடும் எதிர்ப்பு இருந்து வந்தது.

இந்தநிலையில் வந்தனாவின் வீட்டுக்கு நேற்று முன்தினம் இரவு அவரது அண்ணன் பட்டேஸ்வர் திவாரி திடீரென வந்தாா். குடும்பத்தினர் ஒதுக்கி வைத்திருந்த நிலையில் அண்ணன் தன்னை பார்க்க வந்தது, வந்தனாவுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் அவரை அன்புடன் வரவேற்று உபசரித்தார்.

இந்தநிலையில் பட்டேஸ்வர் திவாரி, மைத்துனர் ரோகித் சிங்கை மது குடிக்க அழைத்தார். ஆனால், அவர் மதுகுடிக்க மறுத்துவிட்டார். இதையடுத்து அவர் மட்டும் தனியாக மது குடித்தார். அப்போது, திடீரென அவர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து தங்கை வந்தனா மற்றும் மைத்துனர் ரோகித் சிங்கை நோக்கி சுட்டார்.

சரியான நேரத்தில் ஒதுங்கிக்கொண்டதால் அவர்கள் மீது குண்டு பாயவில்லை. இதனால் பதறிப்போன இருவரும் வீட்டை விட்டு வெளியே ஓடினர். பின்னர் அவர்கள் பட்டேஸ்வர் திவாரியை உள்ளே வைத்து கதவை வெளிப்புறமாக பூட்டினர்.

இதற்கிடையே வேறு சாதி வாலிபரை திருமணம் செய்த தங்கையையும், அவரது கணவரையும் ஆணவ கொலை செய்ய போட்ட திட்டம் தோல்வியில் முடிந்ததால் பட்டேஸ்வர் திவாரி மனமுடைந்தார். இதனால் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டார்.

இதுபற்றி தகவல் அறிந்து சென்ற போலீசார் குண்டு பாய்ந்து ரத்தவெள்ளத்தில் கிடந்த பட்டேஸ்வர் திவாரியை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து சாம்தா நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story