குடியுரிமை சட்ட திருத்தம்: சுப்ரீம் கோர்ட்டால் நிராகரிக்கப்படும் திருச்சி சிவா எம்.பி. நம்பிக்கை


குடியுரிமை சட்ட திருத்தம்: சுப்ரீம் கோர்ட்டால் நிராகரிக்கப்படும் திருச்சி சிவா எம்.பி. நம்பிக்கை
x
தினத்தந்தி 18 Dec 2019 4:38 AM IST (Updated: 18 Dec 2019 4:38 AM IST)
t-max-icont-min-icon

குடியுரிமை சட்ட திருத்தம் சுப்ரீம் கோர்ட்டால் நிராகரிக்கப்படும் என்று திருச்சி சிவா எம்.பி. நம்பிக்கை தெரிவித்தார்.

புதுச்சேரி,

குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து முதலியார்பேட்டையில் புதுவை தெற்கு மாநில தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தெற்கு மாநில தி.மு.க. அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு திருச்சி சிவா எம்.பி. பேசியதாவது:-

குடியுரிமை சட்ட திருத்தத்தினால் நாடு முழுவதும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. பாரதீய ஜனதா அரசு வந்தது முதல் அரசியல் சாசனங்களை மீறி பிரச்சினைக்குரிய சட்டங்களை நிறைவேற்றி வருகிறது.

இந்த சட்டங்கள் மாநிலங்களவையில் அ.தி.மு.க.வின் துணையோடு நிறைவேற்றப்படுகின்றன. இப்போது வடமாநிலங்களில் கலவரம் வெடித்துள்ளது.

இதுபோன்ற அநீதி நடக்க அ.தி.மு.க.தான் காரணம். மக்கள் நலன் பார்க்காமல் பதவியை மட்டும் நோக்கமாக கொண்டு அவர்கள் செயல்படுகிறார்கள். பாரதீய ஜனதா எதை செய்தாலும் அதை ஆதரிக்கிறார்கள்.

ஜம்மு காஷ்மீரை பிரித்து அங்குள்ள தலைவர்களை சிறையில் அடைத்துள்ளனர். இதுபோன்ற நிலைகளை எதிர்த்து தலைவர் கருணாநிதி வழியில் குரல் கொடுக்கிறோம். இதுபோன்ற கருப்பு சட்டங்களை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து எதிர்க்கிறார்.

குடியுரிமைதான் ஒரு நாட்டின் மக்களுக்கு அங்கீகாரம் தரும். இலங்கையில் இருந்து வந்த தமிழர்கள் அகதிகளாக வசிக்கின்றனர். இதேபோல் வடகிழக்கு மாநிலங்களிலும் பலர் உள்ளனர். அவர்கள் முகாமினை விட்டு வெளியே சென்றால்கூட சொல்லிவிட்டுதான் செல்லவேண்டும். 6 மணிக்குள் வந்துவிடவேண்டும். அவ்வாறு வராமல் கைது செய்யப்பட்டால் எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் சிறையில் வைக்கலாம்.

இப்படி அசாமில் 15 லட்சம் அகதிகள் உள்ளனர். குடியுரிமைக்காக பாரதீய ஜனதா மதத்தை கையில் எடுத்துள்ளது.

இதை எதிர்த்து தி.மு.க. வழக்கு தாக்கல் செய்திருப்பதன் மூலம் சுப்ரீம் கோர்ட்டில் இந்த சட்டம் நிராகரிக்கப்படும். இந்த சட்ட மசோதாவில் நான் 2 திருத்தங்களை கொடுத்தேன். அ.தி.மு.க. ஆதரவளிக்காமல் இருந்திருந்தால் மசோதா நிறைவேறி இருக்காது. இப்போது ஜனநாயகத்தை காக்க பல கட்சிகள் ஒன்றிணைந்து உள்ளன. இவ்வாறு திருச்சி சிவா எம்.பி. பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் துணை அமைப்பாளர்கள் அனிபால் கென்னடி, குணா திலீபன், அமுதாகுமார், பொருளாளர் சண்.குமாரவேல், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தைரியநாதன், இளங்கோவன், முன்னாள் எம்.எல்.ஏ. மூர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story