வீட்டை காலி செய்ய வைத்ததால் ஆத்திரம் உரிமையாளரின் 5 வயது மகனை கடத்தி கொன்ற 2 பேர் கைது - பரபரப்பு தகவல்கள்


வீட்டை காலி செய்ய வைத்ததால் ஆத்திரம் உரிமையாளரின் 5 வயது மகனை கடத்தி கொன்ற 2 பேர் கைது - பரபரப்பு தகவல்கள்
x
தினத்தந்தி 18 Dec 2019 4:41 AM IST (Updated: 18 Dec 2019 4:41 AM IST)
t-max-icont-min-icon

வீட்டை காலி செய்ய வைத்த ஆத்திரத்தில் வீட்டு உரிமையாளரின் 5 வயது மகனை கடத்தி கொலை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

வசாய், 

பால்கர் மாவட்டம் வசாய் கிழக்கு, மனிச்பாடா கைலாஷ் குடிசைப்பகுதியை சேர்ந்தவர் தேஜஸ்வர் குமார். பிளாஸ்டிக் ஆலை தொழிலாளி. இவரது மகன் சைலேஷ்(வயது5). கடந்த 3-ந்தேதி வீட்டருகே விளையாடி கொண்டு இருந்த சைலேஷ் திடீரென மாயமானான். இது குறித்து தேஜஸ்வா் குமார் போலீசில் புகார் அளித்தார். போலீசார் கடத்தல் வழக்குப்பதிவு செய்து சிறுவனை தேடி வந்தனர்.

இந்தநிலையில் சிறுவன் மாயமான 3 நாட்கள் கழித்து வசாய் கிழக்கு, ரிச்சர்ட் காம்பவுண்டில் உள்ள ஒரு பூட்டிய அறையில் இருந்து துர்நாற்றம் வீசியது.

இதுபற்றி தகவல் அறிந்து சென்ற போலீசார் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, கடத்தப்பட்ட சிறுவன் சைலேஷ் உடல் அழுகிய நிலையில் அங்கு பிணமாக கிடந்தான். போலீசார் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது, அவன் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

சைலேஷ் கடத்தப்பட்டவுடன் பணம் கேட்டு யாரும் சிறுவனின் தந்தை தேஜஸ்வர் குமாரை தொடர்பு கொள்ளவில்லை. இதையடுத்து சிறுவன் பணத்திற்காக கடத்தி கொலை செய்யப்படவில்லை என்பதை போலீசார் உறுதி செய்தனர். மேலும் முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்து இருக்கலாம் என சந்தேகப்பட்டனர்.

இது குறித்து போலீசார் சிறுவனின் தந்தையிடம் விசாரித்தனர். அப்போது சிறுவனின் தந்தை, ஒரு மாதத்திற்கு முன் அவரது வீட்டில் வாடகைக்கு குடியிருந்த 2 பேரை கட்டாயப்படுத்தி காலி செய்ய வைத்ததாக கூறினார்.

இதையடுத்து போலீசார் தேஜஸ்வர் குமாரின் வீட்டில் குடியிருந்த ஜான்கிலால்(22), முகமது இம்ரான் ஆகியோரை பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். இதில், அவர்கள் தான் சிறுவனை கடத்தி கொலை செய்தது தெரியவந்தது.

இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகின.

ஜான்கிலாலும், முகமது இம்ரானும் சிறுவனின் தந்தை தேஜஸ்வர் குமாருக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வந்து உள்ளனர். இந்தநிலையில் 2 பேரும் வாடகையை சரியாக கொடுக்கவில்லை. இதனால் தேஜஸ்வர் குமார் அவர்களை கட்டாயப்படுத்தி வீட்டைவிட்டு வெளியேற்றினார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், தேஜஸ்வர் குமாரை பழி வாங்க திட்டமிட்டனர்.

இதற்காக அவர்கள் சம்பவத்தன்று வீட்டருகே விளையாடி கொண்டு இருந்த சிறுவன் சைலேசை சாக்லெட் வாங்கி தருவதாக கூறி கடத்திச்சென்று உள்ளனர்.பின்னர் அவர்கள் ரிச்சர்ட் காம்பவுண்டில் திறந்து கிடந்த அறையில் சிறுவனை கழுத்தை நெரித்து கொலை செய்தனர். பிறகு அறையின் கதவை வெளிப்புறமாக பூட்டிவிட்டு ஜான்கிலால் நாலச்சோப்ராவிற்கும், முகமது இம்ரான் மாகிமில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கும் சென்று பதுங்கி இருந்தது போலீஸ் விசாரணையின் போது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் ஜாங்கிலால் மற்றும் முகமது இம்ரானை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story