விழுப்புரம், அரிசி குடோனில் இந்திய உணவுக்கழக ஆலோசனைக்குழு தலைவர் திருச்சி சிவா எம்.பி. ஆய்வு
விழுப்புரத்தில் உள்ள அரிசி குடோனில் இந்திய உணவுக்கழகத்தின் ஆலோசனைக்குழு தலைவர் திருச்சி சிவா எம்பி. நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
விழுப்புரம்,
இந்திய உணவுக்கழகத்தின் தமிழ்நாடு அளவிலான ஆலோசனைக்குழுவின் தலைவர் திருச்சி சிவா எம்பி, மற்றும் ஆலோசனைக்குழுவின் 32 உறுப்பினர்கள் மற்றும்,அதிகாரிகள் நேற்று விழுப்புரம் வந்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள், விழுப்புரம் காட்பாடி ரெயில்வே கேட் அருகே தமிழ்நாடு அரசின் சேமிப்பு கிடங்கில் உள்ள அரிசி குடோனில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு இருந்த அரிசி மூட்டைகளை பார்வையிட்டனர். அவை பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளதா? பூச்சிகள், வண்டுகள் பாதிக்காத வண்ணம் இருக்கிறதா? என்று ஆய்வு செய்தனர்.
பின்னர் திருச்சி சிவா எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகம் முழுவதும் அரிசி குடோன்களில் ஆய்வுசெய்து வருகிறோம். மத்திய அரிசு அனுப்பி வைக்கிற அரிசியின் தரம் குறையவில்லை. குடோன்களில் வைக்கப்பட்டுள்ள அரிசி மூட்டைகளை பூச்சிகள் தாக்காத வண்ணம் பாதுகாக்க வேண்டும். அரிசிமூட்டைகளில் பூச்சிகள் வராமலிருக்க அலுமினியம் பாஸ்பேட் மற்றும் ஒளிவிளக்குகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஏற்கனவே விளை நிலங்களில் ரசாயனம் கலந்த உரங்களை போட்டு உணவுகள் விஷமாகி வருகின்றன. அதற்கு மேலும் ரசாயனத்தைபோட்டு சேதத்தை ஏற்படுத்த விரும்பவில்லை.
எனவே இயற்கை விவசாயி நம்மாழ்வார் கூறியதைப்போல், வேப்பம் இலை, வசம்புபவுடர் ஆகியவற்றை அரிசி மூட்டைகளின் சந்துகளில் வைத்து பூச்சுகளை விரட்டியடிக்கிறோம். சேலம் மாவட்டத்தில் இந்தமுறை பயன்படுத்தப்பட்டுவருகிறது. இதேப்போல் தமிழகம் முழுவதும் உள்ள அரிசி குடோன்களில் இயற்கைமூலிகை பூச்சி விரட்டிகளை பயன்படுத்தி பூச்சிகள் பாதிப்பில் இருந்து அரிசிமூட்டைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
நாடு முழுவதும் இதனை பயன்படுத்த உணவுத்துறை அமைச்சரிடம் எடுத்துரைக்கப்படும். இதற்கு செலவுகள் பலமடங்கு அதிகரித்தாலும், மக்கள் நலனை காப்பதே எங்களின் நோக்கம். ரேஷனில் அரிசியின் அளவு குறைவதாக புகார்கள் கூறப்பட்டால் அது மாநில அரசின் பொறுப்புதான். மத்திய அரசு தேவையான அரிசியினை மாநிலத்திற்கு அனுப்பி வைக்கிறது. போதாது என்றால், அதனை கேட்டு பெற்றுத்தருவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது முன்னாள் அமைச்சர் பொன்முடி எம்.எல்.ஏ., முன்னாள் நகரமன்றத்தலைவர் ஜனகராஜ், இந்திய உணவுக்கழகத்தின் பொதுமேலாளர் செய்ஜூ, மண்டல மேலாளர் சந்திரமோகன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story