ஒன்றியக்குழு கவுன்சிலர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் பா.ஜ.க.வில் இணைந்தார்


ஒன்றியக்குழு கவுன்சிலர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் பா.ஜ.க.வில் இணைந்தார்
x
தினத்தந்தி 19 Dec 2019 4:30 AM IST (Updated: 18 Dec 2019 11:07 PM IST)
t-max-icont-min-icon

தஞ்சை ஒன்றியக்குழு கவுன்சிலர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் பா.ஜ.க.வில் இணைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தஞ்சாவூர்,

தஞ்சை மத்திய ஒன்றிய தி.மு.க. செயலாளராக இருந்தவர் முரளிதரன். இவர் கடந்த 2011-ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் மேலவெளி ஊராட்சி மன்ற தலைவராக வெற்றி பெற்றார். தற்போது நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் ஒன்றியக்குழு வார்டு கவுன்சிலர் பதவிக்கு இவர் தஞ்சை 13-வது வார்டுக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

பா.ஜ.க.வில் இணைந்தார்

இதனைத்தொடர்ந்து அவர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். முரளிதரனுக்கு மாற்று வேட்பாளராக அவருடைய மனைவி வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த நிலையில் முரளிதரன் நேற்று திடீரென அக்கட்சியில் இருந்து விலகி முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிரு‌‌ஷ்ணன் முன்னிலையில் சென்னையில் பா.ஜ.க.வில் இணைந்தார். இதனால் தஞ்சை தி.மு.க. வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அங்கீகார கடிதம்

இது குறித்து விசாரித்தபோது, தி.மு.க. சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட முரளிதரன் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டாலும், அவருக்கு கட்சி சின்னமான உதயசூரியன் வழங்குவதற்காக அங்கீகார கடிதம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. அதற்கு பதிலாக தி.மு.க. சார்பில் இன்னொரு வேட்பாளராக மனுதாக்கல் செய்த ஆறுமுகம் என்பவருக்கு உதயசூரியன் சின்னத்துக்கான அங்கீகார கடிதம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் அவர் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.

ஆனால் தி.மு.க. நிர்வாகிகள் கூறுகையில், முரளிதரன் ஏற்கனவே வேறு கட்சிக்கு செல்வதற்கு முடிவெடுத்து விட்டதால்தான் அவருக்கு கட்சியின் அங்கீகார கடிதம் வழங்கப்படவில்லை என தெரிவித்தனர்.


Next Story