கீரனூர் பகுதியில், நெல் நடவுக்காக உழவுப்பணி தீவிரம்


கீரனூர் பகுதியில், நெல் நடவுக்காக உழவுப்பணி தீவிரம்
x
தினத்தந்தி 19 Dec 2019 3:00 AM IST (Updated: 18 Dec 2019 11:07 PM IST)
t-max-icont-min-icon

கீரனூர் பகுதியில் நெல் நடவுக்காக உழவுப்பணி தீவிரமாக நடந்து வருகிறது.

கீரனூர், 

பழனி அருகே உள்ள கீரனூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான நரிக்கல்பட்டி, கோரிக்கடவு ஆகிய இடங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் விளைநிலங்கள் உள்ளன. இங்கு சண்முகாநதி மற்றும் பாலாறு-பொருந்தலாறு அணை தண்ணீர் மூலம் நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் இந்த ஆண்டு பழனி பகுதியில் வடகிழக்கு பருவமழை போதிய அளவில் பெய்யவில்லை. ஆனால் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மட்டுமே கனமழை பெய்து அணைக்கு நீர்வரத்து ஏற்பட்டது. இதையடுத்து அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் வாய்க்கால் மூலம் அந்த பகுதியில் உள்ள குளங்களில் நிரம்பி வருகிறது.

இதையடுத்து தற்போது பெரும்பாலான இடங்களில் நெல் நடவுக்காக வயல்களில் உழவுப்பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கிடையே நெல் சாகுபடி பணி தாமதமாக தொடங்கி இருப்பதால், நாற்று நடவு செய்யாமல் நேரடியாக விதைப்பு முறையில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, பாசனத்துக்காக இந்த ஆண்டு தண்ணீர் மிகவும் தாமதமாக திறக்கப்பட்டது. தற்போது உள்ள நிலையில் நாற்றங்கால் அமைப்பதற்கு அதிக நாட்கள் ஆகும். மேலும் நடவுப்பணிக்கு போதிய ஆட்கள் கிடைப்பதில்லை. குளங்களில் போதிய அளவில் தண்ணீர் இல்லை. எனவே இந்த ஆண்டு நேரடியாக நெல் விதைப்பு பணியில் ஈடுபட்டிருக்கிறோம். இதன் காரணமாக நடவு செலவு குறைவதோடு பயிர் விளைச்சல் நன்றாக இருக்கும் என்றனர்.

Next Story