இணைந்து செயல்பட்டால் நம்மை வெல்ல யாரும் இல்லை - அ.தி.மு.க.வினருக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ வேண்டுகோள்


இணைந்து செயல்பட்டால் நம்மை வெல்ல யாரும் இல்லை - அ.தி.மு.க.வினருக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ வேண்டுகோள்
x
தினத்தந்தி 19 Dec 2019 4:30 AM IST (Updated: 19 Dec 2019 12:42 AM IST)
t-max-icont-min-icon

இணைந்து செயல்பட்டால் நம்மை வெல்ல யாரும் இல்லை என்று அ.தி.மு.க.வினருக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ வேண்டுகோள் விடுத்தார்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் அ.தி.மு.க. பணிக்குழு ஆலோசனை கூட்டம் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது. தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர்.

கூட்டத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசியதாவது:-

எத்தனையோ இடர்பாடுகளை கடந்து உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. நாடாளுமன்ற தேர்தலில் சரிவை சந்தித்தாலும், தொடர்ந்து வந்த இடைத்தேர்தல்களில் சரிவை தூக்கி நிறுத்தி உள்ளோம். இதனை கண்டு தி.மு.க. கதிகலங்கி உள்ளது. உள்ளாட்சி தேர்தலை நிறுத்த பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மக்கள் மன்றத்தில் நம்பிக்கை இல்லாமல், நீதிமன்றத்தை நாடினார்கள். எதிர்வரும் சட்டமன்ற தேர்தலுக்கு இந்த உள்ளாட்சி தேர்தல் அடிப்படையாக இருக்க வேண்டும்.

கூட்டுறவு சங்க தேர்தலை நடத்தினோம். இதில் அ.தி.மு.க. வெற்றி பெற்று, அ.தி.மு.க.வினர் பலர் முக்கிய பொறுப்புகளில் உள்ளனர். இந்த உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றால் 2021-ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று அம்மா அரசு தொடரும். தி.மு.க.வின் கதை முடிந்து விடும். இதனால் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்த பொறுப்பாளர்களின் ஆலோசனையை பெற்று அனைவரும் ஒற்றுமையாக இருந்து உழைக்க வேண்டும். தேர்தலுக்கு குறைவான நாட்களே உள்ளன. இது நம் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் காலம். நாம் இணைந்து செயல்பட்டால் நம்மை வெல்ல யாரும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் அமைச்சர் ராஜலட்சுமி பேசும் போது, முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஒவ்வொரு தேர்தல்களிலும் பல சோதனைகளை கடந்து வந்து உள்ளோம். நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றோம். அதே போன்று உள்ளாட்சி தேர்தலில் அனைத்து பதவிகளிலும் வெற்றி பெற வேண்டும். மக்களின் நம்பிக்கையை பெற்று, கடுமையாக உழைத்து வெற்றி பெற வேண்டும் என்று கூறினார்.

கூட்டத்தில் மாநில அமைப்பு செயலாளர்கள் மனோஜ் பாண்டியன், முருகையா பாண்டியன் எம்.எல்.ஏ, என்.சின்னத்துரை, எம்.எல்.ஏ.க்கள் செல்வமோகன்தாஸ் பாண்டியன், சின்னப்பன், முன்னாள் எம்.எல்.ஏ. மோகன், முன்னாள் மாவட்ட செயலாளர் ஆறுமுகநயினார், நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா, புறநகர் மாவட்ட செயலாளர் பிரபாகரன் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

Next Story