கஞ்சா விற்பனை செய்த தம்பதி உள்பட 4 பேர் கைது


கஞ்சா விற்பனை செய்த தம்பதி உள்பட 4 பேர் கைது
x
தினத்தந்தி 18 Dec 2019 11:00 PM GMT (Updated: 18 Dec 2019 7:14 PM GMT)

கஞ்சா விற்பனை செய்த தம்பதி உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

பாடாலூர்,

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா விஜயகோபலபுரம் கிராமத்தில் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் படி, பாடாலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகந்தி தலைமையிலான போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் கஞ்சா செடி வைத்து, கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த கடலூர் மாவட்டம், பண்ருட்டி தாலுகா புதுப்பேட்டை பகுதியை சேர்ந்த வெங்கடேசன்(வயது 22), பெரம்பலூர் சங்குபேட்டையை சேர்ந்த உமாமகேஸ்வரன் மனைவி லட்சுமி(32) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். முன்னதாக அவர்களிடம் இருந்த கஞ்சா செடியையும், 143 கிராம் எடையுள்ள மொத்தம் 33 கஞ்சா பொட்டலங்களையும், ரூ.4,900-யும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

கைது

அவர்களிடம் நடத்திய விசாரணையில், வெங்கடேசன் தனியார் டயர் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருவதும், அவர் கஞ்சா பயன்படுத்தும் பழக்கத்திற்கு அடிமையானதால் லட்சுமியிடம் இருந்து கஞ்சா வாங்கி பயன்படுத்துவதும், விற்பதும் தெரியவந்தது. மேலும் அந்த கஞ்சா விதைகளை வெங்கடேசன் தனது அறையில் டப்பாவில் போட்டு விதைத்துள்ளார். அது கஞ்சா செடியாக வளர்ந்திருப்பது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இதேபோல் பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்யா தலைமையிலான போலீசார் ரோந்து சென்றார். அப்போது பெரம்பலூர் ரோவர் ஆர்ச் அருகே மோட்டார் சைக்கிளில் வைத்து கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த பெரம்பலூர் 13-வது வார்டுக்கு உட்பட்ட அழகிரி தெருவை சேர்ந்த செல்வகுமார்(29), அவரது மனைவி அஞ்சலி(27) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து ரூ.3,200 மதிப்புள்ள கஞ்சாவையும், ரூ.5,100-யும், மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story