புஞ்சை கடம்பங்குறிச்சி அரசமரத்தான் கருப்பண்ணசாமி கோவில் திருவிழா


புஞ்சை கடம்பங்குறிச்சி அரசமரத்தான் கருப்பண்ணசாமி கோவில் திருவிழா
x
தினத்தந்தி 18 Dec 2019 10:30 PM GMT (Updated: 18 Dec 2019 7:31 PM GMT)

புஞ்சை கடம்பங்குறிச்சி கிராமத்தில் உள்ள அரசமரத்தான் கருப்பண்ணசாமி கோவில் திருவிழா நடைபெற்றது. இதில் பூசாரி அரிவாள் மீது ஏறி நின்று அருள்வாக்கு கூறினார்.

வேலாயுதம்பாளையம்,

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அருகே புஞ்சை கடம்பங்குறிச்சி கிராமத்தில் பிரசித்தி பெற்ற அரசமரத்தான் கருப்பண்ணசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்தாண்டும் திருவிழா கடந்த 16-ந்தேதி தொடங்கியது. இதையொட்டி அன்று கோவில் முன்பு பச்சை பந்தல் அமைக்கப்பட்டு, பாலாயி அம்மன் சிலை வைக்கப்பட்டது. தொடர்ந்து கரகம் பாலித்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.

பின்னர் நேற்று முன்தினம் அரசமரத்தான் கருப்பண்ணசாமிக்கு பக்தர்கள் ஆடு, கோழிகளை வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து பூசாரிக்கு அருள்வந்து அரிவாள் மீது ஏறி நின்று பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார். தொடர்ந்து கோவிலை சுற்றி வந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பேய் விரட்டும் நிகழ்ச்சி

முக்கிய நிகழ்ச்சியாக நேற்று மதியம் பேய் விரட்டும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்து கொள்ளுவதற்காக சிலர் காவிரி ஆற்றில் நீராடி ஈர துணியுடன் தேங்காய், பழம் தட்டுடன் வரிசையாக உட்கார வைக்கப்பட்டனர். பின்னர் கோவில் பூசாரிக்கு அருள் வந்து ஆடி, அவர்கள் தலையில் விபூதி வைத்தார். பின்னர் அவர்கள் அரசமரத்தான் கோவில் முன்பு அமரவைத்து, உடுக்கை அடிக்கப்பட்டு பேயை விரட்டும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர். இன்று கிடா வெட்டும், மற்றும் மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

Next Story