நகை கண்காட்சி நடத்த எதிர்ப்பு: நாகர்கோவிலில் கடைகள், பட்டறைகள் அடைப்பு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


நகை கண்காட்சி நடத்த எதிர்ப்பு: நாகர்கோவிலில் கடைகள், பட்டறைகள் அடைப்பு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 18 Dec 2019 11:00 PM GMT (Updated: 18 Dec 2019 7:45 PM GMT)

நாகர்கோவிலில் நகை கண்காட்சி நடத்த அனுமதிக்கக்கூடாது என வலியுறுத்தி நகை தொழிலாளர்கள் பாதுகாப்பு பேரவையினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையொட்டி நாகர்கோவிலில் நகை கடைகளும் பட்டறைகளும் அடைக்கப்பட்டு இருந்தன.

நாகர்கோவில்,

சென்னையில் உள்ள தங்க நகை நிறுவனம் ஒன்று நாகர்கோவில் நகரில் உள்ள ஒரு ஓட்டலில் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 3 நாட்கள் நகைக் கண்காட்சி மற்றும் விற்பனை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது. இந்த கண்காட்சியால் குமரி மாவட்ட நகைத்தொழிலாளர்களும், நகை வியாபாரிகளும் பாதிக்கப்படுவார்கள். இதனால் நகைத்தொழிலும் சீரழிவதோடு, அமைதியற்ற பொருளாதார சீரழிவுக்கு வழிவகுக்கும் என்று கூறி நகை தொழிலாளர் பாதுகாப்பு பேரவையினர் இந்த கண்காட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் கண்காட்சியை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று நகை கடைகள், நகை தொழில் பட்டறைகளை அடைத்து நாகர்கோவிலில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மனு

நாகர்கோவில் வேப்பமூடு மாநகராட்சி பூங்கா முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு பேரவை தலைவர் செலஸ்டின் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் மீனாட்சி சுந்தரம், பேரவை முதன்மை செயலாளர் ரகுபதி மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். துணை தலைவர் நாகலிங்கம், குமரி மாவட்ட ஜூவல்லர்ஸ் அசோசியேஷன் செயலாளர் கோபாலகிருஷ்ணன், குமரி மாவட்ட அனைத்து விஸ்வகர்ம சமுதாய கூட்டமைப்பு தலைவர் மாணிக்கம், பார்வதிபுரம் விஸ்வகர்ம வேதவித்யாலயா அறக்கட்டளையை சேர்ந்த கணேஷ் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். ஆர்ப்பாட்டத்தை குமரி மாவட்ட ஜூவல்லர்ஸ் அசோசியேஷன் தலைவர் ஷாஜகான் தொடங்கி வைத்து பேசினார்.

இதில் நகை கடை உரிமையாளர்கள், பட்டறை தொழிலாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்ட முடிவில் கோரிக்கை அடங்கிய மனு மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும், மாவட்ட போலீ்ஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும் வழங்கப்பட்டது.

1,500 நகை கடைகள்- பட்டறைகள்

இந்த போராட்டத்தையொட்டி நாகர்கோவில் மீனாட்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று காலை முதல் மதியம் வரை பெரும்பாலான நகை கடைகளும், பட்டறைகளும் அடைக்கப்பட்டன. சில கடைகளும், பட்டறைகளும் வழக்கம் போல் செயல்பட்டன.

இதுதொடர்பாக குமரி மாவட்ட நகை தொழிலாளர்கள் பாதுகாப்பு பேரவை துணை தலைவர் நாகலிங்கம் கூறுகையில், “குமரி மாவட்டத்தில் நகை கடைகள் மற்றும் நகை பட்டறைகள் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேல் உள்ளன. ஆனால் நேற்று எங்களது போராட்டத்துக்கு ஆதரவாக சுமார் 1500 சிறிய, பெரிய நகை கடைகள், நகை பட்டறைகள் அடைக்கப்பட்டு இருந்தன” என்றார்.

Next Story