தாடிக்கொம்பு அருகே, தனியார் மில்லில் வாக்காளர்களுக்கு பிரியாணி விருந்து? அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு
தாடிக்கொம்பு அருகே தனியார் மில்லில் பிரியாணி விருந்து நடந்தது. வாக்காளர்களுக்கு கொடுத்ததாக கூறி, அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தாடிக்கொம்பு,
திண்டுக்கல் அருகே உள்ள செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சி தலைவர் பதவிக்கு வளர்மதி என்பவர் போட்டியிடுகிறார். அவருடைய உறவினர் பாஸ்கர். இவருக்கு, தாடிக்கொம்புவை அடுத்த செட்டிநாயக்கன்பட்டி காந்திநகர் காலனி சிவன் கோவில் அருகே நூல்மில் உள்ளது.
அந்த மில்லில், செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட வாக்காளர்களுக்கு பிரியாணி விருந்து மற்றும் பணம் கொடுப்பதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் தேர்தல் பறக்கும் படை அலுவலரும், தாசில்தாருமான சுல்தான் சிக்கந்தர் தலைமையிலான அதிகாரிகள் தனியார் மில்லுக்கு விரைந்தனர். அங்கு 500-க்கும் மேற்பட்டோர் வரிசையில் அமர்ந்து பிரியாணி சாப்பிட்டு கொண்டிருந்தனர்.
100-க்கும் மேற்பட்டோர் பிரியாணி வாங்குவதற்காக வரிசையில் காத்திருந்தனர். பிரியாணி மற்றும் உணவுப்பொருட்களை பரிமாறும் பணி பரபரப்பாக நடந்து கொண்டிருந்தது.
இது தொடர்பாக பாஸ்கரிடம் பறக்கும் படையினர் விசாரணை நடத்தினர். அப்போது, தனது மகள் பிறந்தநாளையொட்டி பிரியாணி விருந்து கொடுத்ததாக அவர் தெரிவித்தார்.
ஆனால் தேர்தலுக்கும், இந்த விருந்துக்கும் எந்த சம்பந்தமில்லை என்று கூறி பறக்கும் படையினருடன் விவாதம் செய்தார்.
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போது, இதுபோன்ற விருந்து நடத்துவதற்கு முன் அனுமதி பெற வேண்டும் என்று பறக்கும் படையினர் அறிவுறுத்தினர்.
இதற்கிடையே பிரியாணி சாப்பிட்டு கொண்டிருந்தவர்களையும், சாப்பிடுவதற்காக காத்திருந்தவர்களையும் மில்லில் இருந்து அதிகாரிகள் வெளியேற்றினர். இதனால் பிரியாணி விருந்து பாதியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டது.
பாஸ்கர் தனது மகள் பிறந்த நாளையொட்டி பிரியாணி விருந்து கொடுத்தாரா? அல்லது தனது உறவினருக்காக வாக்காளர்களுக்கு விருந்து வைத்தாரா? என்ற கோணத்தில் வருவாய்த்துறையினர் மற்றும் தாடிக்கொம்பு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தாடிக்கொம்பு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story