இரவில் சாலையில் திரிவதால் ஏற்படும் விபத்தை தடுக்க, மாடுகளின் கொம்பில் மிளிரும் ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வு


இரவில் சாலையில் திரிவதால் ஏற்படும் விபத்தை தடுக்க, மாடுகளின் கொம்பில் மிளிரும் ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வு
x
தினத்தந்தி 19 Dec 2019 4:00 AM IST (Updated: 19 Dec 2019 1:27 AM IST)
t-max-icont-min-icon

காரைக்குடி பகுதியில் இரவு நேரங்களில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால் ஏற்படும் விபத்தை தடுக்கும் வகையில் மாட்டின் கொம்பில் மிளிரும் ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

காரைக்குடி, 

காரைக்குடி பகுதியில் உள்ள நூறடி சாலை, செக்காலை ரோடு, கல்லூரிச்சாலை, பழைய பஸ் நிலையம், கழனிவாசல், வாட்டர் டேங் பகுதி உள்ளிட்ட சாலைகளில் இரவு நேரங்களில் ஏராளமான மாடுகள் சுற்றித்திரிகின்றன. இந்த மாடுகள் பகல் நேரங்களில் எங்காவது மேய்ச்சலுக்கு சென்று விட்டு இரவு நேரங்களில் சாலையில் படுத்துக்கொள்கிறது. இதனால் இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிள், கார் உள்ளிட்ட வாகனங்களில் வருபவர்கள் இந்த மாடுகள் படுத்து கிடப்பது கூட தெரியாமல் அதன் மீது மோதி விபத்தை சந்திக்கும் நிகழ்வு தினந்தோறும் நடந்து வருகிறது. இதையடுத்து வாகன ஓட்டிகளை விபத்தில் இருந்து தடுக்கும் வகையில் காரைக்குடியில் இயங்கி வரும் மக்கள் மன்றம் சார்பில் வினோதமான முறையில் விழிப்புணர்வு செய்ய முடிவு செய்தனர். அதன்படி இரவு நேரங்களில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை ஒன்றாக சேர்த்து, இரவு நேரத்தில் சாலைகளில் ஒட்டப்படும் மிளிரும் ஸ்டிக்கர்களை அந்த மாடுகளின் இரு கொம்பு பகுதியிலும் ஒட்டப்பட்டுள்ளது. இதனால் சாலையில் இந்த மாடுகள் படுத்திருக்கும் போது தொலை தூரத்தில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் முன் கூட்டியே அறிந்துகொண்டு விபத்தில் இருந்து தப்பித்துக்கொள்ள முடியும்.

இது குறித்து காரைக்குடி மக்கள் மன்றத்தின் தலைவர் ராஜ்குமார் கூறியதாவது:- காரைக்குடி பகுதியில் இரவு நேரங்களில் சுமார் 200-க்கும் மேற்பட்ட மாடுகள், காளைகள் சுற்றித்திரிகின்றன. இந்த பகுதியில் உள்ள சாலைகளில் போதிய மின் விளக்கு இல்லாததால் இரவு நேரங்களில் மாடுகள் கூட்டமாக படுத்துக்கொள்கிறது. இதனால் இந்த சாலையில் வரும் மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகன ஓட்டிகள் மாடுகள் படுத்துக்கிடப்பதை கவனிக்காமல் அதன் மீது மோதி கீழே விழுந்து காயமடைந்து செல்கின்றனர். இது குறித்து ஏற்கனவே நாங்கள் சம்பந்தப்பட்ட நகராட்சித்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை மனு கொடுத்தோம். ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து இரவு நேரத்தில் சுற்றித்திரியும் இந்த மாடுகளை எல்லாம் ஒன்று திரட்டுவதற்காக தினந்தோறும் அவற்றுக்கு பழத்தை கொடுத்து மாட்டின் கொம்பில் மிளிரும் ஸ்டிக்கரை கடந்த 2 நாட்களாக ஒட்டி வருகிறோம். இதனால் தொலை தூரத்தில் இருந்தே வாகன ஓட்டிகளுக்கு இந்த மாடுகள் இரவு நேரத்தில் சாலைகளில் படுத்து கிடப்பது தெரிய வரும். இதனால் அவர்கள் விபத்தில் இருந்து தப்பிக்க இந்த வழிமுறை உதவும். இதுவரை 60-க்கும் மேற்பட்ட மாடுகளுக்கு இவ்வாறு ஒட்டி உள்ளோம். இந்த விழிப்புணர்வை மற்ற மாவட்டங்களில் உள்ளவர்கள் செய்தால் பாதி விபத்துகளை குறைக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார். 

Next Story