குடியாத்தத்தில் போலீசாரை அவதூறாக பேசி மிரட்டிய தி.மு.க.பிரமுகர் கைது


குடியாத்தத்தில் போலீசாரை அவதூறாக பேசி மிரட்டிய தி.மு.க.பிரமுகர் கைது
x
தினத்தந்தி 19 Dec 2019 4:15 AM IST (Updated: 19 Dec 2019 1:55 AM IST)
t-max-icont-min-icon

குடிபோதையில் வாகனம் ஓட்டியவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொலைமிரட்டல் விடுத்த தி.மு.க.பிரமுகர் கைது செய்யப்பட்டார்.

குடியாத்தம், 

குடியாத்தம் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சாலமன் உள்ளிட்ட போலீசார் நேற்றுமுன்தினம் இரவு புதிய பஸ் நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பாண்டியன் நகரை சேர்ந்த கங்காதரன் மகன் ரோ‌‌ஷன்ராஜ் (வயது24) மோட்டார்சைக்கிளில் வேகமாக வந்தார். போலீசார் தடுத்து நிறுத்தியபோது அவர் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். உடனே ரோ‌‌ஷன்ராஜ், அது குறித்து நண்பர்களுக்கு போன் செய்து தகவல் அளித்தார். இதனையடுத்து அங்கு குடியாத்தம் தொகுதி தி.மு.க.தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் ஞானபிரகாசம் (வயது 30) வந்து போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்கள் போலீசாரை ஆபாசமாக பேசி, பணி செய்யவிடாமல் தடுத்து கொலைமிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் குடியாத்தம் புதிய பஸ்நிலையம் அருகில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். ரோ‌‌ஷன்ராஜ் மற்றும் தி.மு.க.தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் ஞானபிரகாசம் ஆகியோரை அவர்கள் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்றனர். சம்பவம் தொடர்பாக அவர்கள் மீது சப்-இன்ஸ்பெக்டர் சாலமன் புகார் அளித்தார். அதன்பேரில் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன், சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து ரோ‌‌ஷன்ராஜ், ஞானபிரகாசம் ஆகியோரை கைது செய்தனர்.

Next Story