பதற்றமான வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் - தேர்தல் பார்வையாளர் விவேகானந்தன் தகவல்


பதற்றமான வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் - தேர்தல் பார்வையாளர் விவேகானந்தன் தகவல்
x
தினத்தந்தி 19 Dec 2019 3:45 AM IST (Updated: 19 Dec 2019 3:03 AM IST)
t-max-icont-min-icon

பதற்றமான வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என்று தேர்தல் பார்வையாளர் விவேகானந்தன் கூறினார்.

ஈரோடு, 

உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு ஈரோடு மாவட்ட தேர்தல் பார்வையாளர் கே.விவேகானந்தன் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் தேர்தல் பார்வையாளர் கே.விவேகானந்தன் பேசும்போது கூறியதாவது:-

உள்ளாட்சி தேர்தல் வருகிற 27-ந் தேதி, 30-ந் தேதி ஆகிய 2 கட்டங்களாக நடக்கிறது. இதில் முதல்கட்ட வாக்குப்பதிவில் 4 ஆயிரத்து 645 அலுவலர்களும், 2-ம் கட்ட வாக்குப்பதிவின் போது 6 ஆயிரத்து 934 அலுவலர்களும் என மொத்தம் 11 ஆயிரத்து 579 அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் தேர்தல் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 15-ந் தேதி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான முதல்கட்ட பயிற்சி 14 இடங்களில் அளிக்கப்பட்டது. தொடர்ந்து, 2 கட்டங்களாக பயிற்சி வழங்கப்பட உள்ளது. 3 ஊராட்சி ஒன்றியங்களுக்கு தலா ஒரு பறக்கும்படை வீதம் சுழற்சி முறையில் 15 குழுக்களில் ஒரு அலுவலர் உள்பட 4 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

மேலும் 14 ஊராட்சி ஒன்றியங்களில் வாக்கு சீட்டு பெட்டிகள் பாதுகாப்பாக வைக்கப்பட உள்ளது. வாக்குப்பதிவு மையங்களில் குடிநீர், கழிப்பறை, மின்சாரம், மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வுதள வசதி மற்றும் சக்கர நாற்காலி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளதை தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும்.

தேர்தல் தொடர்பாக வரப்பெறும் அனைத்து புகார்களையும் உடனடியாக பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பதற்றமான வாக்குச்சாவடி மையங்களை கண்காணிக்க நுண்பார்வையாளர்களை நியமித்து, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்திட வேண்டும்.

வாக்குப்பதிவு மையங்களில் ஆண், பெண் வாக்காளர்கள் தனித்தனியே வாக்களிக்க வழிவகை செய்ய வேண்டும். வாக்குப்பெட்டி நன்றாக இருக்கிறதா என்பதை சரிபார்க்க வேண்டும். போதுமான அளவில் அழியாத மை உள்ளதா என்பதை கண்காணிக்க வேண்டும். 14 ஊராட்சி ஒன்றியங்களுக்கு மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு மண்டல குழுவிற்கு ஒரு மண்டல அலுவலர், அலுவலக உதவியாளர், வாகன டிரைவர் என 3 பேர் வீதம் 135 குழுக்களில் மொத்தம் 540 நபர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

வாக்குப்பதிவு அலுவலர்கள் முதல்நாளே வாக்குச்சாவடி மையத்திற்கு செல்ல வேண்டும். வாக்குப்பதிவு தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக வாக்குச்சாவடியில் அனைத்து முன்னேற்பாடு நடவடிக்கைகளையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களும் அவர்களின் சின்னங்களும் வாக்காளர்கள் அறியும் வகையில் அமைக்கப்பட வேண்டும்.

வாக்குச்சாவடியினுள் எவரும் புகை பிடிப்பதற்கோ அல்லது செல்போன் வைத்திருக்கவோ அனுமதிக்க கூடாது. வாக்காளர்களுடன் வரும் கைக்குழந்தை, பிறர் உதவியின்றி நடமாட இயலாத நலிவுற்றோர், பார்வையற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளி ஆகியோருக்கு துணையாக வரும் ஒருவரை மட்டும் வாக்குப்பதிவு மையத்திற்குள் அனுமதிக்கலாம். வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பு வாக்குச்சாவடியில் பயன்படுத்தப்பட உள்ள 4 வகை வாக்குச்சீட்டுகளின் ஒவ்வொன்றின் முதல் எண்ணையும், முடிவு எண்ணையும் குறித்து கொள்ள வாக்குச்சாவடி முகவர்களை அனுமதிக்க வேண்டும்.

எனவே ஈரோடு மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலை நேர்மையாகவும், சிறப்பாகவும் நடத்திட அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைத்து பணியாற்றிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.சக்திகணேசன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாலகணேஷ், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் எஸ்.பார்த்திபன் உள்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

ஈரோடு மாவட்ட தேர்தல் பார்வையாளர் கே.விவேகானந்தனிடம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள முதல் தளத்தில் தினமும் காலை 10.30 மணி முதல் பகல் 11.30 மணி வரையும், மாலை 4 மணி முதல் 5 மணி வரையும் பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார் மனுக்களை வழங்கலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story