கடையநல்லூரில் பரிதாபம்:நடைபயிற்சிக்கு சென்றவர், கார் மோதி சாவு


கடையநல்லூரில் பரிதாபம்:நடைபயிற்சிக்கு சென்றவர், கார் மோதி சாவு
x
தினத்தந்தி 19 Dec 2019 4:15 AM IST (Updated: 19 Dec 2019 3:31 AM IST)
t-max-icont-min-icon

கடையநல்லூரில் நேற்று நடைபயிற்சிக்கு சென்றவர், கார் மோதி பரிதாபமாக இறந்தார்.

கடையநல்லூர், 

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தெற்கு அய்யாபுரம் தெருவை சேர்ந்த காதர் மீரான் மைதீன் மகன் சாகுல் அமீது (வயது 44). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். சமீபத்தில் வெளிநாட்டு வேலையை முடித்துவிட்டு ஊர் வந்துள்ளார். இங்கு அவர் புதிதாக தொழில் தொடங்க இருந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று காலை 6 மணிக்கு கடையநல்லூர் மின்சார வாரிய அலுவலகம் அருகே மதுரை- தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் நடைபயிற்சிக்கு சென்றார். அப்போது மதுரையில் இருந்து தெற்கே கேரளாவை நோக்கி வேகமாக வந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, எதிர் திசையில் நடைபயிற்சியில் ஈடுபட்ட சாகுல்அமீது மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.

உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டதும், மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், சாகுல் அமீது ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து கடையநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சாகுல்அமீதுவுக்கு மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Next Story