சப்-இன்ஸ்பெக்டர் போல் நடித்து லாரி டிரைவர்களிடம் பணம் பறித்த வாலிபர் கைது
சப்-இன்ஸ்பெக்டர் போல் நடித்து லாரி டிரைவர்களிடம் பணம் பறித்து வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
செங்குன்றம்,
சென்னையை அடுத்த மணலி சர்மா தெருவைச் சேர்ந்தவர் செல்வக்குமார்(வயது 27). இவர், மாதவரம், மணலி 200 அடி சாலையில் லாரி டிரைவர்களிடம் தான் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் என்று கூறி, அங்கு லாரியை நிறுத்தினால் தனக்கு பணம் தரவேண்டும் என மிரட்டி பணம் பறித்து வந்தார்.
அதேபோல் தூத்துக்குடியைச் சேர்ந்த லாரி டிரைவர் மகாராஜன் என்பவரையும் மிரட்டி பணம் பறிக்க முயன்றார். இதனால் அவர் மீது சந்தேகம் அடைந்த மகாராஜன், இதுபற்றி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.
உடனடியாக மாதவரம் பால்பண்ணை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று செல்வக்குமாரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர், பல மாதங்களாக இதுபோல் சப்-இன்ஸ்பெக்டர் எனக்கூறி லாரி டிரைவர்களிடம் பணம் பறித்து வந்தது தெரிந்தது.
இதுபற்றி மாதவரம் பால்பண்ணை போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வக்குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
* மாதவரம், திருமுல்லைவாயல் உள்ளிட்ட பகுதிகளில் வீடு புகுந்து திருடிய பிரபல கொள்ளையன் அப்பன்ராஜ்(27) என்பவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 7 பவுன் தங்க நகைகள், 1 கிலோ வெள்ளி பொருட்கள், 2 மோட்டார் சைக்கிள்கள், 4 செல்போன்கள், 4 கேமராக்கள் மற்றும் கைக்கடிகாரங்களை பறிமுதல் செய்தனர்.
* புழல் அருகே நடந்த வாகன சோதனையில் ஆந்திராவில் இருந்து சென்னைக்கு மினிவேனில் கடத்தி வந்த 210 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போதை பொருள் தடுப்பு போலீசார், இது தொடர்பாக தேனியைச் சேர்ந்த ஈஸ்வரன்(28) என்பவரை கைது செய்தனர்.
* சவுகார்பேட்டையை சேர்ந்த தல்லாராம் (50) என்பவரது துணிக்கடை பூட்டை உடைத்து ரூ.8 லட்சம் மதிப்புள்ள துணிகளை திருடிய ஊழியர்களான ராஜஸ்தானை சேர்ந்த மகேஷ் சவுத்திரி (24), தயால்ராம்(21), சியாம் (22) ஆகிய 3 பேரையும் தனிப்படை போலீசார் ராஜஸ்தானில் கைது செய்தனர்.
* திருமணம் ஆகாத நிலையில் தாய் புஷ்பாவதியுடன் வசித்து வந்த பட்டாபிராமைச் சேர்ந்த லீலாகிருஷ்ணன் (46), தனது தாயும் இறந்துவிட்டதால் தனிமையில் வாழ பயமாக இருப்பதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.
*ஓட்டேரி சத்தியவாணி முத்துநகரில் பழுதடைந்துள்ள தமிழ்நாடு குடிசை மாற்றுவாரிய அடுக்குமாடி குடியிருப்பை இடித்து விட்டு நவீன அடுக்குமாடி வீடுகளை கட்ட தங்களுக்கு மாற்று இடம் வழங்காமல் வீடுகளை காலி செய்ய மாட்டோம் என்று கூறி வியாசர்பாடியில் உள்ள குடிசை மாற்று வாரிய அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
*மூலக்கொத்தளம் காட்பாடா பகுதியில் சாலையோரம் இருந்த ஆக்கிரமிப்பு கடைகள் மற்றும் வாகனங்களை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.
* வில்லிவாக்கத்தை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் அதிபர் மல்லிகார்ஜூன் என்பவரது வீட்டில் 11 பவுன் தங்க நகை, ஒரு கிலோ வெள்ளிபொருட்கள் மற்றும் ரூ.10 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடிச்சென்றனர்.
Related Tags :
Next Story