இந்திரா உணவக பெயரை மாற்ற அனுமதிக்க மாட்டோம்; டி.கே.சிவக்குமார் எச்சரிக்கை
இந்திரா உணவக பெயரை மாற்ற அனுமதிக்க மாட்டோம் என்று டி.கே.சிவக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பெங்களூரு,
காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மந்திரியுமான டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
இந்திரா காந்தி பெயர், மக்களின் உணர்வுடன் கலந்துவிட்ட ஒன்று. அதனால் தான் அவரது பெயரில் மலிவு விலை உணவகத்தை கர்நாடகத்தில் நாங்கள் தொடங்கினோம். இந்திரா உணவக பெயரை மாற்ற முயற்சி செய்தால் நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம். அதை அனுமதிக்கவும் மாட்டோம். நாங்களும் ஆட்சி நடத்தினோம்.
அப்போது முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெயரில் இருந்த திட்டங்களுக்கு பெயர் மாற்றம் செய்யவில்லை. ஏனென்றால் வாஜ்பாய் பெயர் இந்த நாட்டுக்கு தேவை என்று கருதினோம். மொரார்ஜி தேசாய், ஜே.பி.நாராயண் பெயரில் இருந்த திட்டங்களையும் நாங்கள் ரத்து செய்யவில்லை. வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக், இந்திரா உணவகத்தின் பெயரை மாற்ற கனவு காண்கிறார்.
நாங்கள் இன்னும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறோம். இதற்கு முன்பு இருந்த அரசுகள் எவ்வாறு செயல்பட்டன என்பதை பா.ஜனதாவினர் தெரிந்துகொள்ள வேண்டும். இந்திய குடியுரிமை சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. எந்த அரசும் சாதி, மத அடிப்படையில் முடிவு எடுக்க முடியாது. ஜனநாயகத்தில் இது வெட்கக்கேடான செயல். நமது நாடு மதசார்பற்ற கொள்கையில் நம்பிக்கை வைத்து செயல்படுகிறது.
இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.
Related Tags :
Next Story