குடியுரிமை சட்ட திருத்த மசோதா ஜனநாயகத்திற்கு எதிரானது கி.வீரமணி பேட்டி


குடியுரிமை சட்ட திருத்த மசோதா ஜனநாயகத்திற்கு எதிரானது கி.வீரமணி பேட்டி
x
தினத்தந்தி 20 Dec 2019 4:30 AM IST (Updated: 19 Dec 2019 10:36 PM IST)
t-max-icont-min-icon

குடியுரிமை சட்ட திருத்த மசோதா ஜனநாயகத்திற்கு எதிரானது என்று கி.வீரமணி கூறினார்.

நாகப்பட்டினம்,

நாகை மேலகோட்டைவாசல் பகுதியில் பெரியார் சிலை உள்ள இடத்தில் பெரியார் படிப்பகம் மற்றும் திராவிடர் கழக அலுவலகம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்த இடத்தை திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி நேற்று பார்வையிட்டார். மேலும் அங்குள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பாடம் கற்றுத்தர வேண்டும்

இந்த இடத்தில் இருந்த மிகவும் பழமைவாய்ந்த பெரியார் சிலை கஜா புயலின்போது சேதம் அடைந்தது. அதன்பின்னர் இந்த இடத்தில் புதிய சிலை வைக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து இந்த இடத்தில் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு பொது நல நோக்குடன் பெரியார் படிப்பகம் அமையவுள்ளது.

ஊரக உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு திராவிடர் கழகம் ஆதரவு அளிக்கும். அ.தி.மு.க.வின் பெயரை சொல்லிக்கொண்டு தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சி செய்கிறது. இவ்வாறு ஆட்சி செய்யும் அ.தி.மு.க. அரசிற்கு நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் வாக்காளர்கள் நல்ல பாடம் கற்றுத்தர வேண்டும்.

ஜனநாயகத்துக்கு எதிரானது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்ட திருத்த மசோதா ஜனநாயகத்திற்கு எதிரானது. அகதிகளாக குடியேறியவர்களை மனிதாபிமானத்துடன் தான் பார்க்க வேண்டும். மதத்தின் பெயரால் பார்க்கக்கூடாது. இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை மறுக்கப்படுவதற்கு மத்திய அரசு சொல்லும் காரணங்களை ஏற்றுக்கொள்ள முடியாது.

இலங்கை தமிழர்களின் பிரச்சினையால் தி.மு.க. அரசு இரண்டு முறை ஆட்சியை இழந்துள்ளது. எனவே அவர்களை பற்றி பேச தி.மு.க.விற்கு தான் தகுதியுள்ளது. அதனால் தான் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பேசுகிறார். அ.தி.மு.க. கூட்டணி கட்சியினர் இடையே ஒற்றுமை இல்லை. இதனால் தான் ஊரக உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வை சேர்ந்தவர்கள் சுயேச்சையாக போட்டியிடுகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது திராவிடர் கழக மாநில அமைப்பு செயலாளர் குணசேகரன், பொதுச் செயலாளர் ஜெயக்குமார், மாவட்ட தலைவர் நெப்போலியன், செயலாளர் பூபே‌‌ஷ்குப்தா ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story